அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து?? - பாகம் - 3 ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Tuesday, November 20, 2018

அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து?? - பாகம் - 3

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!


அனைவருக்கும் வணக்கம்.

"அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து??" என்ற தலைப்பில் அரசியல் யோகம் பற்றி தொடர் பதிவுகளாக படித்து வருகின்றீர்கள்.

முந்தைய  பதிவுகளை, இதுவரை படித்திராதவர்கள்,  இந்த லிங்கை கிலிக் செய்யவும்.
  1. அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து? - பாகம் 1
  2. அரசியல் எனக்கு ஒத்து வருமா? தலைவனாக்குமா தலையெழுத்து? - பாகம் 2
உதாரண ஜாதகமாக, இந்திய அரசியலில் பிரமிப்புடன் பார்க்கபட்ட, அரசியல் ஆளுமையில் சிகரம் கண்ட, மறைந்த முன்னால்,  மாண்புமிகு  முதல் அமைச்சர். J. ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து வருகின்றோம்.

முதல் பதிவில் அரசியல் ஈடுபாட்டிற்கான ஜாதகத்தில்
  • முக்கிய கிரக அமைப்புகள்
  • பாவ முனை தொடர்புகள்
  • கிரக காரகங்கள், பாவ காரகங்கள்
  • அரசியலுக்கான அடிப்படை விதிகள் 
ஆகியவற்றை விளக்கமாக பார்த்தோம்.

இரண்டாவது பதிவில் ஜெயலலிதா அம்மையாரின் ஜாதகத்தில், தசா புக்திகளை கொண்டு அவர் வாழ்நாளில் கிரகங்கள் நிகழ்த்திய சினிமா மற்றும் அரசியலுக்கான சுப மற்றும் அசுப யோக பலன்களை, தசா புக்தி வாரியாக மிக துல்லியமாக கேது தசை தொடங்கி சூரிய தசை வரை ஆய்வு செய்தோம்.

சந்திர தசை அரசியலுக்கு யோகமாக அமைந்ததா? வாருங்கள் இந்த பதிவில் விரிவாக அலசுவோம்!

சந்திர தசை 30/08/1977 - 30/08/1987

சந்திர தசை 10 வருடம். 29வ 6மா 6நாள் தொடங்கி 39வ 6மா 6நா முடிய.

சந்திர தசை 2,6,8,10 ஆகிய பாவ காரகங்களை மூல பாவமாக ஏற்று தசையை நடத்தியுள்ளது.

ஜெயலலிதா அம்மையார் அவர்களின் வாழ்வில் சந்திர திசை காலகட்டம் பல திருப்பு முனைகளை தந்துள்ளது.

இந்த பதிவில் சந்திர தசையில், சந்திர புக்தியில் இருந்து ஆய்வை தொடங்குவோம்.
அரசியலில் தனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார், "அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டுமென்ற ஆசை சிறு வயது முதலே இருந்தது. ஒருவேளை, நான் சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால்... இன்று தேர்தலுக்காக எங்காவது பேசி வெளுத்து வாங்கி கொண்டிருப்பேன்" என்றுள்ளார். 
உள்ளூர் அரசியல் மட்டுமல்ல, உலக அரசியல நிலவரங்களையும் தொடக்கம் முதலே கூர்ந்து கவனித்தவர்; ஜெயலலிதாவிடம் அயர்லாந்து தேர்தல் பற்றியும் உரையாடலாம். மாசேதுங் பற்றியும் விவாதிக்கலாம்" என்கிறார், 1970-களில் ஜெயலலிதா அம்யாரை அதிகமுறை பேட்டி கண்ட திரைஞானி.
இந்த உலக வாழ்க்கையில் மனிதனின் வாழ்க்கைநிலையை சரியாக உணர்ந்து, கர்ம பதிவினால் இப்பிறவியில் செயலாற்றக்கூடிய வினை பயனை ஜோதிட சாஸ்த்திரம் கொண்டு தெளிவாக அறியாலாம்.

ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அரசியல் ஈடுபாட்டிற்கான  விதி கொடுப்பினையை அவர் ஜாதகத்தில் காணும் போது...
ஒரு சம்பவத்தின் அனைத்து நிகழ்வுகளும் அதன் பாவமுனைகளிலே நிச்சயிக்கபடுகின்றன என்பது சார ஜோதிடத்தின் முதன்மையான விதி.
அந்த வகையில் அரசியல் ஈடுபாட்டிற்கான காரணங்களை 5ம் பாவமுனையை ஆராயும் போது, ஜெயலலிதா அம்மையார் ஜாதகத்தில் அரசியல் ஆர்வம் தரும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்னும் 5ம் பாவமுனை துலாத்தில் 14° 57' 18" தொடங்கி விருச்சிகத்தில் 16° 36' 47" வரை.
5ம் பாவமுனை சுவாதி 3ம் பாதத்தில் ராகு நட்சத்திரத்தில்(St), கேது உப நட்சத்திரம்(SL), குரு உப  உப நட்சத்திரம்(SSL), சூரியன் உப உப உப நட்சத்திரம்(SSSL) ஆகும்.

5ம் பாவ உப அதிபதி கேது நின்றது , குரு நட்சத்திரத்திரமான விசாகம் 2ம் பாதத்தில், புதன் உப நட்சத்திரம்(SL), சந்திரன் உப உப நட்சத்திரம்(SSL), சுக்கிரன் உப உப உப நட்சத்திரம்(SSSL) ஆகும்.

ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன், குரு 5ம் பாவத்திற்கு, பாவமுனை மற்றும் கிரக தொடர்புகள் மூலம் வலிமையாக தொடர்புகொண்டதன் விளைவு அரசியல் ஈடுபாட்டிற்கான ஆர்வத்தை கொடுத்துவிடும்.

5ம் பாவத்திற்கு உப உப நட்சத்திர அதிபதி, 5ம் பாவ உப நட்சத்திரம் கேது, குரு சாரத்தில் அமைந்து ,5ம் பாவம் ருண ரோக, சத்ரு என்னும் வெற்றி ஸ்தானம் 6ம் பாவத்தை வலிமையாக தொடர்பு கொண்டள்ளது.
எமது குருநாதர் சார ஜோதிட தந்தை, டிஜிட்டல்யுக வராகிமிஹிரர், ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் அவர்களின் 40வருட ஜோதிட ஆராய்ச்சியில் உருவாக்கிய சார ஜோதிடத்தில் பொதுவாக, 5ம் பாவம் 6ம் பாவ தொடர்புகொண்டால், நல்ல வெற்றியுள்ள மனிதன். தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியையே ஜாதகர் அநுபவிப்பார். அரசியல் வெற்றிக்கு ஆறாம் பாவம் மிக வலிமையாக அமைய வேண்டும் என்று ஆணிதரமாக கூறுவார்.
சந்திர தசை காலகட்டங்களில் குரு புக்தி முடிய சினிமா துறையில் இருந்தார். சனி புக்தியில் அரசியலில் இணைந்தார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு என 1961 முதல் 1980வரை 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா அம்மையார், அவருடைய அரசியல் குருவும், அ.தி.மு.கவின் நிறுவனருமான புரட்சி தலைவர் எம்.ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். இந்த நெருக்கமே அவரை இயல்பாக அ.தி.மு.கவுக்கு அழைத்து வந்தது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1982ம் ஆண்டு ஜெயலலிதா அம்மையார் இணைந்தார் .

கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதா அம்மையாரை, எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

ஜெயலலிதா அம்மையாரின் ஆங்கிலப் புலமையை கவனத்தில் கொண்டு, அவரை 03.04.1984 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.

அப்போது சந்திர தசை(2,6,8,10), புதன் புக்தி (1,11), செவ்வாய் அந்தரம் (1,5,11). 11ம் பாவம் 10ன் காரகத்தை வளர்க்கவே செய்யும் ஆதலால் அவருக்கு ராஜியசபா பதவி கிடைத்தது.

உட்கட்சி பூசலால் பல சங்கடங்களையும் சந்தித்து வந்தார். இவரை பற்றி அவதூரான செய்திகள் பரவியதன் விளைவால் அரசியலே வேண்டாம் என்று
1984-ஆம் ஆண்டு மே மாதம் கொள்கைபரப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் எழுதினார். இந்த ராஜினாமாவை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின் இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதற்கு காரணம் தசையில் 6, 8ம் பாவங்கள் இணைந்து செயல்படுவதாலும், ராகு (8,11) அந்தரம், சனி(4,8,12) சூட்மம் 8ம் பாவத்திற்கு சாதகமாக இருந்ததால் சனி கலக காரகன், அவமானம், மனவலி, வேதனையான நிகழ்வுகளை நிகழ்த்திவிடும். சாதக மற்ற இந்த சூழ்நிலை, அவரை ராஜினாமா செய்யும் அளவிற்கு சூழலுக்கு தள்ளிவிட்டுள்ளது.

அடுத்து வந்த கேது(6,8) புக்தியும் கை கொடுக்கவில்லை. காரணம் 11/1984 தொடங்கி 06/1985 வரை வம்பு, வழக்கு, பிரச்சனையின் பூதாகரம், தெய்வ அனுகூலமற்ற நிலையை  8ம் பாவம் வலிமையாக செயல்படும் போது அசுப பலனாகவே நிகழ்ந்துவிடும். இந்த சூழலில் மனிதனை தன்னிலையை இழக்க வைத்திடும். பெயர், புகழ், பதவியை இழக்க வைத்திடும்.

இந்த காலக்கட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற குழுவின் துணை தலைவராக ஜெயலலிதா அம்மையார் இருந்தார். இதிலிருந்தும் ஜெயலலிதா அம்மையாரை நீக்கினார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதா அம்மையார் அளித்த பேட்டி கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சர்ச்சைக்கு உள்ளானது. அந்த பேட்டியால் எம்.ஜி.ஆர் கடும் கோபம் கொள்ள காரணமாக அமைந்தது.

இப்போது நன்றாக உணர்வீர்கள், இயற்கை அசுப கிரகம், சாதகமற்ற பாவங்களை புக்தியாக நடத்தும் போது சந்திர தசை (2,6,8,10) கொடுப்பினையை மீறி செயல்பட்டு அனைத்து பாக்கியத்தையும் கெடுத்துவிடும். உச்சானி கொம்பில் இருந்தால் அதால பாதாளத்திற்கு தள்ளிவிடும். இந்த நிலை கேது புக்தி முழுக்க நீடித்தது.

அடுத்துவந்த இயற்கை சுபர் சுக்கிரனின் புக்தியில் மெல்ல மெல்ல நிலமை மாறியது. சுக்கிர புக்தி 1,7,11ம் பாவங்களை  06/1985 முதல் 03/1987 வரை நடத்தியது.

இழந்த பதவியை திரும்ப பெறவைத்தது.

ஆம் எம்.ஜி.ஆர் அவர்களின் கோபம் தணிந்து மீண்டும் செப்டம்பர் மாதம் 1985ம் ஆண்டு, சரியாக சொல்ல வேண்டும் என்றால் சந்திர தசை(2,6,8,10), சுக்கிர புக்தி, சுக்கிர அந்தரம் (1,7,11), புதன் சூட்சமத்தில் (1,11) கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா அம்மையார்.
பொதுவாக சூரிய தசை மற்றும் புக்தி காலங்களில் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு அகம் சார்ந்த நலன்களுக்கு சாதக மற்ற பலன்களே நிகழ்ந்துள்ளன. கௌரவம் இழந்து, மரியாதையற்று, அவமான அசிங்கங்களை சந்திக்கும் சூழலை தந்துள்ளது. மேலும் இந்த சமயங்களில் உறவில் யாரையாவது இழப்பார். 
அப்பா, அம்மாவை இழந்தது சூரியன் சம்பந்தபடும் காலங்களில் தான்.

இதைபற்றி நமது முந்தைய அத்யாயத்தில், வாசக பெருமக்கள்,  விளக்கமாக படித்து அறியலாம். 

அதன் பிறகு அதிரடி மாற்றங்களால் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளார்.
சந்திர தசை காலத்தில் சினிமா துறையில் நடிப்பதற்கு முடிவுரை எழுதி அரசியலுக்கு தொடக்க உரையை எழுதிய ஜெயலலிதா அம்மையாருக்கு சந்திர தசையின் இறுதி புக்தியான சூரிய புக்தி (01.03.1987 - 30.08.1987) கடுமையான சவாலை அரசியல் வாழ்வில் சந்திக்க வைத்தது. இந்த கால கட்டத்தில் தனது அரசியல் குரு எம்.ஜி.ஆர் அவர்களின் நேரடி தொடர்பை இழந்தார். சக கட்சி உறுப்பினர்களாலும் ஓரங்கட்டபட்டார்.
சார ஜோதிடத்தின் உயர்நிலை கிரக விரிவு விதிகளை கொண்டு ஒரு தசையின் முழு செயல்பாடுகளை மிக துல்லியமாக கணித்துவிடலாம்.

எம் குருநாதர் சார ஜோதிட சக்ரவர்த்தி A. தேவராஜ் அய்யா அவர்களின் படைப்பில் மலர்ந்த "கொடுப்பினையும் தசாபுக்தியும்" புத்தகத்தில் மிக விரிவாக விளக்கி இருப்பார்.

இயற்கை சுபர்கள் குரு, சுக்கிரன், சந்திரன்(வளர்பிறை) மற்றும் புதன், இயற்கை பாவிகள் சூரியன், செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது ஆகிய பாகுபாடுகள் இதில் கிடையாது.

சுப கிரக தசையில் முழுவதும் நல்லதே நடக்கும் என்றும் அசுப கிரக தசையில் கெட்டதே நடக்கும் என்று எண்ண வேண்டாம்.

ஒரு தசையின் சம்பவத்தை நிகழ்த்தும் நாயகர்கள், தசா நடத்தும் கிரகம் தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம், உப உப நட்சத்திரங்களே. இவர்கள் தொடர்பு கொண்ட பாவங்களை பொருத்து ஆய்வுக்குரிய தசை ஜாதகருக்கு யோகமாக செயல்படுமா? அல்லது அவயோகமாக செயல்படுமா? என்பதை மிக துல்லியமாக கணித்துவிடலாம்.

தசையின் முதல் மூன்று புக்திகளை நட்சத்திரங்கள் நடத்தும். அடுத்த மூன்று புக்திகளை உப நட்சத்திரங்கள் செயல்படுத்தும். இறுதி மூன்று புத்திகளை உப உப நட்சத்திரம் செயல்படுத்தும். இதனால் தான் தீய கிரகங்களின் தசையில் முழுவதும் தீமையே நடந்துவிடுவதில்லை, சுப கிரக தசைகளில் முழுவதும் நன்மையே நிகழ்ந்துவிடுவது இல்லை.
ராகு தசையா..? அய்யோ..! படுத்தி எடுத்துவிடுமே என்ற பயமும் வேண்டாம்...! சுக்கிர தசையா..??? இனி யோக காலம் தான் என்ற வீன் நம்பிக்கையும் வேண்டாம்.
ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஜாதகத்தில், சந்திர தசையை ஆய்வு செய்ததில் சந்திரன் உப நட்சத்திர அளவில் (2,10), உபஉப நட்த்திரத்தில் எந்த பாவமும் இல்லை, நட்சத்திர அளவில் (4,8,12) யை மூல பாவமாக ஏற்று தசையை நிகழ்த்தியுள்ளது.


மூலபாவத்தில் 2,10 பாவ கொடுப்பினை  உப நட்சத்திர அளவில் நிகழ வேண்டும் என்றால் இதை முறிக்கும் பாவங்கள் செயல்பட கூடாது. அப்போது தான் உபநட்சத்திர கொடுப்பினை 60% சதவீதம் இயங்கும்.

மூலபாவத்தில் 4,8,12,  நட்சத்திர அளவில் இயங்குவதால் இந்த தசையில் எதிலும் தடை, சுகவீனம், வலிவேதனை, இழப்பு போன்றவை நிகழும். ஆனால் இது நட்சத்திர அளவில் என்பதால் 15% சதவீத பாதிப்பை தந்துவிடும்.

சந்திர தசையில் முதல் மூன்று புத்திகளின்  (சந்திரன், செவ்வாய், ராகு) சம்பங்களை நட்சத்திர அதிபன் குரு ஏற்று நிகழ்த்தியுள்ளார்.

குரு உப நட்சத்திர அளவில் முதல் மூன்று புத்திகாலகட்டத்தில் 6, 9ம் பாவ பலனை 60% சதவீதமும், உ.உப நட்சத்திரத்தில் 5ம் பாவ பலனை 25% அளவில் நிகழ்த்தியுள்ளார். உபாதிபதி புதன் எந்த பாவத்தையும் ஏற்று நடத்தாததலால் தடையில்லாமல் நிகழ்ந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தார். நல்ல சம்பாத்தியம், பெயர் புகழுடன் இருந்தார்.

அடுத்த மூன்று புத்திகளை உப அதிபதி புதன் ஏற்று நடத்த, புதன் எந்த பாவங்களையும் தொடர்புகொள்ளாததால், எட்டாம் பாவத்திற்கு  நின்ற கிரகம் என்ற வகையில் அடுத்த மூன்று புத்திகளை ஏற்று நடத்தியுள்ளது.

ராகு உ.அ அளவில் 4,8ம் பாவங்களை 85% (60+25) அளவில் இறுதி மூன்று புக்திகளையும் ஏற்று நடத்தியதின் விளைவு இந்த காலகட்டத்தில் சினிமாவில் பெரிதாக ஜொளிக்க முடியவில்லை. கொஞ்ச காலம் தனிமை வாழ்க்கையை வாழ நேரிட்டது.

ஆறுதல் அளிக்கும் நிலையில் உ.உ நிலையில் (1,4,6,8,9) ம், நட்சத்திர அளவில் 1,5,9 பாவ பலன்களை நிகழ்த்தியுள்ளது. இதில் 1ம் பாவம் 40%, 6ம் பாவம் 25%, 9ம் பாவம் 15% பாவ பலனை சந்திர தசையில் நிகழ்த்தியுள்ளது.

இதிலிருந்து சந்திர தசை சிறப்பாக இல்லை என்பதை நீங்கள் இறுதி முடிவெடுத்துவிடுவீர்கள். ஆம் அதுதான் சரி.
  • சந்திர தசையில் லக்னத்திற்கு சாதகமற்ற 4,8,12ம் பாவங்களே மிக வலிமையாக செயல்பட்டதால் சந்திர தசை குறிப்பிடும் அளவிற்கு முன்னேற்றத்தை தரவில்லை.
  • அரசியலிலும் பெரிதாக பொறுப்பு வகிக்க முடியவில்லை. பொறுப்பில் இருந்த காலகட்டத்திலும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளையே சுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை சுப கிரகமான சந்திர தசையில் நடந்தேறியது.
  • ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன் தசைகள் குடும்ப வாழ்விற்கும், அரசியலுக்கும் பெரிதாக யோகம் அளிகாத நிலையில் இளமை காலங்கள் முழுவதும் ஒரு நிலையற்ற வாழ்க்கையே வாழ்ந்துள்ளார் என்பதை ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஜாதகத்தை சார ஜோதிட முறையில் ஆய்வு செய்ததில் மிக துல்லியமாக காரணங்களை அறிய முடிகின்றது.
  • அரசாலும் யோகம் தரும் ஒளிகிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் தசைகள் கைவிரித்தன. 
சினிமா துறையில் இருந்த போது ஆஸ்தான வழிகாட்டியாகவும், தனிபட்ட வாழ்வில் நெருங்கிய நண்பராகவும், அரசியல் வாழ்விற்கு ராஜ குருவாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் ரின் நட்பும் கட்சியில் முக்கிய பொருப்பில் இருந்தும், முக்கியதுவம் இன்றி ஓரங்கட்டபட்டார்.

கட்சியின் கொள்கை முடிவுகளில் இவரது ஆலோசனைகளும் முக்கியதுவம் அளிக்கபடாமல் நிராகரிக்கபட்டன.
தனி வாழ்க்கையிலும் பல சோக நிகழ்வுகளை வரலாற்றில் பதியும் அளவிற்கு சந்திர தசையில் ஜெயலலிதா அம்மையாரின் இளமைகால வாழ்க்கை வலி வேதனை, அதிஷ்டமற்ற, துர்திஷ்டமாக அமைந்தது.
சரியாக சொன்னால் இந்த காலகட்டத்தில் தனி வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் அனாதையாக்கபட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

மொத்தத்தில் சார்ஜ் இறங்கிய பேட்ரி போல் சக்தி இழந்து சோர்ந்து போனார்.

வாழ்வின் எதிர்காலமே தொலைத்துவிட்ட விரக்திக்கு தள்ளபட்டார்.

இதற்கெல்லாம் காரணம் சந்திரன் நின்ற உப உப அதிபதி ராகு ஆறு புக்திகளை அசுப பாவ தொடர்பு கொண்டு நிகழ்த்தியதின் விளைவு.

இவ்வளவு சோதனைகளையும் கடந்து அரசியலில் நாடு போற்றும் மாபெரும் பெண் சக்தியாக உருவெடுத்தது எப்படி?

அடுத்து வந்த இயற்கை அசுபரான செவ்வாய் தசையாவது அரசாளும் யோகத்திற்கு கைகொடுத்ததா..?

காத்திருங்கள் அடுத்த பதிவில் மிக விரிவாக அலசுவோம்.

(தொடரும்)

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer, 
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.