உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் இருக்கா? ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Tuesday, October 16, 2018

உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் இருக்கா?

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...!

அனைவருக்கும் வணக்கம்...!

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புகட்டி மூன்று வேண்டும்னு கிராமத்தில் சொல்ல கேட்டிருப்போம். மனிதனுக்கு தேவையான அந்த மூன்றை தான், சரஸ்வதி சபதம் படத்தில், கவியரசு கண்ணதாசன் மிக அருமையாக பாடல் வரிகளை செதுக்கி இருப்பார்.

கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?

என்று மனிதனுக்கு அதிமுக்கியமான தேவைகளில் கல்வியை பாடலின் ஆரம்பத்தில் அமைத்து, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.

ஒருவன் கற்ற கல்வி வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது. இது ஆன்றோர் வாக்கு.

கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்..! என்று பிளேட்டோ குறிப்பிடுவார்.
இவ்வாரு ஒவ்வொருவரும் கல்வியின் அவசியத்தை அறிய ஆன்றோர் பெருமக்கள் பழமொழிகளில் கூறிவருவார்கள்.

கலைகள் அனைத்திற்கும் உரியவளான அன்னை சரஸ்வதியின் அருள் அனைவருக்கும் அவசியம்.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய உணர்விக்கும் என்னம்மை - தூயஉருப்பளிங்கு போல்வாள் என" உள்ளத்தினுள்ளே இருப்பளிங்கு வாராது இடர்"
என்றவாறு கலைமகள் வணக்க பாடலை பார்க்கும் போது ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதும். அதற்குரியவளான சரஸ்வதி தேவியை வணங்கிட அவை நமக்கு கிட்டிடும் என்பதும் புலனாகிறது.

ஒருவருக்கு சரஸ்வதி யோகம் அமைந்துவிட்டால், சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்குவார்கள். கலைகளை கசடற கற்று சிறந்த கலைஞர்களாக திகழ்வார்கள்.

சிறந்த கல்வி அறிவு பெற்று உலகம் போற்றும் மாமேதைகளாக வளம் வருவார்கள். இயற்கையாகவே இவர்கள் ஞான அறிவை பெற்று மிக திறமைசாலியாக வெளிப்படுவார்கள்.

புகழ்பெற்ற பொருளியல் வல்லுனர் ஜியார்ஜ், தனது பதினான்கு வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர். பொருளியலை முறையாக படித்ததில்லை. ஆனால் அடிப்படை பொருளியல் விதிகளைப் புரிந்து கொண்டு, உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியவர். அதேபோல்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப் பெரிய ஞானி. அவர் படித்தது உலகமெனும் பல்கலைக் கழகத்தில்தான். இன்னும் பல உதாரண புருஷர்களை கூறலாம்.

இவர்கள் எல்லாம் அன்னை சரஸ்வதியின் பெருங்கருணைக்கு பாத்திரமானவர்கள்.
உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் இருக்கா?
ஒருவர் ஜாதகத்தில் வித்தியா காரகன் புதன், கலைகளின் அதிபதி சுக்கிரன் மற்றும் ஆழ்ந்த அறிவை அளிக்கும் குரு இம்மூவரும் சேர்ந்து, சுபபாவங்களான வாக்கு ஸ்தானம் எனும் இரண்டாம் பாவம், கல்வி ஸ்தானம் எனும் நான்காமிடம், பூர்வ புன்னியம் எனும் 5மிடம், வெற்றி ஸ்தானம் என்னும் ஆறாமிடம், பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாமிடம், லாபஸ்தானம் என்னும் 11மிடம் ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த ஜாதகருக்கு சரஸ்வதி யோகம் உண்டு. லக்ன பாவத்தின் உப அதிபதி 8,12ம் பாவங்களை தொடர்பின்றி இருந்தால் சரஸ்வதி யோகம் வாழ்நாள் முழுக்க ஜாதகருக்கு பலன் அளிக்கும்.

இந்த அமைப்புள்ள ஜாதகரின் தனஸ்தானம்(2), சுகஸ்தானம் (4), வெற்றி ஸ்தானம்(6), தொழில் ஸ்தானம்(10) ஆகிய பாவங்கள் சிறாப்பாக செயல்பட்டு, அவர்களின் வாழ்நாளில், எவ்வித சிரமமும் இன்றி வளமாக வாழ்வார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இவர்களின் சம்பாத்தியமும் ஆச்சர்யபடும் அளவில் இருக்கும். இவர்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்புகள் பல்லாயிரம் கோடிகள் மதிப்புடையதாக இருக்கும். உதாரணத்திற்கு கூறவேண்டும் என்றால் கூகுள் நிறுவனத்தின் தற்போதய தலைவர் சுந்தர்பிச்சை அவர்களின் வருமானம் பலகோடிகள்.

ஆதிக்கம் நிறைந்த முதன்மை கிரகம்(Predominant Planets) 

கிரக காரங்கள், பாவ காரகங்கள் என இருவகைகளில் நாம் உயர்கணித சாரஜோதிடத்தில் பலன்களை பார்த்து வருகின்றோம். மதிபிற்குரிய, ஜோதிஷ ஆச்சார்யா S. அருண் சுப்பிரமணியன் அவர்கள் ஆதிக்கம் நிறைந்த கிரங்கள்(Predominant Planets) என்ற தலைப்பில், மிக ஆழமான, கிரகங்களின் பாவ தொடர்பு விதியை எமது 12ம் ஆண்டு மாநாட்டு மலரில் கொடுத்திருப்பார்.

ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர, உப நட்சத்திர, உப உப நட்சத்திர அதிபதி பலன்களையே செய்யும்... ஆதலால் தான்  நின்ற நட்சத்திர, உப நட்சத்திர, உப உப நட்சத்திர வாயிலாக தொடர்பு கொண்ட பாவங்களை கொண்டு மேற்சொன்ன கிரகங்களின் பலன்களை நிர்ணயம் செய்கின்றோம்.

அந்த வகையில் 2,4,6,10ம் பாவங்களின் உபாதிபதி நின்ற நட்சத்திர, உப நட்சத்திர, உப உப நட்சத்திர அதிபதி தொடர்பை பெறுமானால் இங்கு ஜாதகருக்கு சரஸ்வதி யோகம் செயல்படும்.
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் மற்ற கிரகங்களை காட்டிலும் அதிகமான பாவமுனைகளுக்கு அதிபதியாக வந்திருந்தால் அந்த கிரகத்தின் தாக்கம் ஜாதகரின் மேல் மற்ற கிரகங்களைவிட அதிகமாக காணப்படும்.
இதன் அடிப்படையில் 2,4,6,10 ஆகிய பாவங்களின் உபாதிபதி புதன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ஆதிகத்தை பெறும் போது ஜாதகர் கல்வியில் மிக பிரமாதமாக செயல்படுவார்.

அதித புத்தி, நன்கு சிந்திக்கும் திறன், புத்தி கூர்மை, நினைவாற்றலில் மேம்பாடு, தனிதன்மையுடன் இயங்குதல், கலை ஞானம், கணித வல்லமை, பிரப்பஞ்ச ஆற்றலை கிரகிக்கும் தன்மை போன்ற எண்ணற்ற சிறப்பியல்புகளை ஜாதகர் பெற இந்த அமைப்பு வழி வகுத்துவிடும்.

பெற்றோர்களின் கனவு

ஒவ்வொரு பெற்றோர்களும் தன் பிள்ளைகள் கல்வியில் சிறப்பாக தேர்ச்சி பெறவேண்டும். உயர் கல்வி பெற்று நல்ல பண்டிதனாக வளர வேண்டும். அதிக சம்பளத்தில் உத்தியோகம் அமைந்து வசதியாக வாழ வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள்.

இவர்கள் எதிர் பார்ப்பது போல் பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமைந்துவிட்டால் இவர்கள் பாக்கிய சாலிகள். பெற்றோர்களின் கனவு நடைமுறையில் பலிக்க வேண்டும் என்றால் அவர்களின் பிள்ளைகளின் ஜாதகத்தில் மேற்கூறியவாறு பிள்ளைகளின் ஜாதக அமைப்பு இருந்தால் நிச்சயம் கனவுகள் மெய்படும்.

தசாபுக்தி கைகொடுக்குமா?

சிலர் ஜாதகத்தில், கிரகங்களின் தொடர்பு விதி கொடுப்பனையில் சுமாராக இருக்கும் ஆனால் தாசா புக்திகள் மிக அற்புதமாக செயல்படும். பாவமுனை தொடர்பு சரியில்லை என்றால் ஜாதகருக்கு சரஸ்வதி யோக அமைப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட கூடாது. தசாபுக்திகளின் செயல்பாடுகளில் கிரகங்கள் விஸ்வரூபம் எடுக்கும். ஆதலால் தாசாபுக்தியையும் இனைத்தே ஜாதகரின் யோக பலனை அறிய வேண்டும்.

எந்த தசை யோகம் அளிக்கும்

பொதுவாக ஜாதகரின் பத்து வயது வரை 5,9 பாவங்களின் தசை அமைந்தால், இவர்களது பால வயது வாழ்க்கை மிக அற்புதமாக இருக்கும். இயற்கை பேராற்றல் இவர்களின் அறிவு வளர்ச்சிக்கு பக்க பலமாக இருக்கும். மற்ற ஒற்றைபடை பாவங்களான 1,3,7,11 அமைந்தாலும் சிறப்புதான்.

பத்து வயதிற்கு மேல் 45 வயது வரை இரட்டைபடை பாவங்களான 2,4,6,10 போன்ற பாவங்களின் தசைகள் நடந்தால் ஜாதகர் கல்வியிலும் சம்பாத்தியத்திலும் சிறந்து விளங்குவார்.

இது மிகபெரிய யோக அமைப்பு.

எல்லோருக்கும் இதே போல் அமைவதில்லை. அவரவர் விதி கொடுப்பினைக்கு ஏற்ப யோகங்கள் செயல் படும்.
மிக மோசமன 8,12ம் பாவ தசைகள் ஜாதகருக்கு, பால பருவம் மற்றும்  இளம் வயதில் ஜாதகருக்கு வரவே கூடாது. அப்படி வந்தால் ஜாதகரின் ஆரோக்கியம் கெடும், கல்வியில் தடை ஏற்படும் இதனால் ஜாதகரின் முன்னேற்றம் பாதிக்கபடும். வாழ்க்கை போராட்டமாக மாறிவிடும்.
இதைவிட மோசமான 5,9 ம் தசை ஜாதகரின் இளம் வயது முதல் மத்திம வயது வரை வரவே கூடாது... ஏனென்றால் இந்த தசை ஜாதகரை பொருப்பற்றவராக நடத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவிடாமல் தடுத்துவிடும். குந்தி தின்றால் குன்றும் காரையும் என்பது போல் ஜாதகரின் பொருளாதார நிலை வீழ்ச்சி அடையும்.

பெற்றோர்களின் கடமை

தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தை வருடத்திற்கு ஒரு முறையாவது ஜோதிடர்களை அனுகி தற்கால சூழல்களில் பிள்ளைகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என அறிய வேண்டும்.

பிள்ளைகளின் ஜாதகத்தில், ஆதிக்கம் நிறைந்த கிரகங்களின் காரகங்களுக்கு ஏற்ப பிள்ளைகளின் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாதக மற்ற கிரக சூழல் மற்றும் திசை நடத்தினால் பிள்ளைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்களை தட்டி கொடுத்து முன்னேற்ற வேண்டும்.

பத்தாம் வகுப்பு இறுதியில், நல்ல ஜோதிடர்களை அனுகி, பிள்ளைகளின் ஜீவன அமைப்பின் கொடுப்பினைக்கு ஏற்ப, அதற்கு சாதகமான பாடபிரிவுகளில் மேல்நிலை கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகளின் வாழ்வு விதிபடி நன்றாக அமையும்.

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634
Email-Jbm2k07@gmail.com