தனி மரமா மறுமணமா-Familylife-or-spritualLife|ThilakJBalamurugan-KPAdvanceStellerAstrology ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Monday, April 4, 2022

தனி மரமா மறுமணமா-Familylife-or-spritualLife|ThilakJBalamurugan-KPAdvanceStellerAstrology

தனி மரமா? மறுமணமா?



"வாழ்க்கையில் இணங்கினால் இனிப்பு, பிணங்கினாள் கசப்பு. இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்கு இல்லற வாழ்க்கை குதூகலிக்கும்."

முப்பத்தி ஏழு மதிக்கதக்க நடுத்தர வயது பெண்மணி. அந்த பெண்மணி முனைவர் பட்டம் முடித்தவர். பிரபல தனியார் பல்கலையில் மேலாண்மை துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றுள்ளார். குழந்தை இல்லை. அதன் பிறகு திருமண பந்தத்தில் பிடிப்பில்லாமல், வேலையின் நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து சென்னையில் தனிமை வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்.

தனிமை வாழ்க்கை மிக பெரிய சவாலாக இருக்கு. மன அழுத்தத்தால் ரொம்ப கஷ்டப்படுகிறேன். இதே மாதிரி போனா என் எதிர்காலம் என்னா ஆகுமோன்னு பயமா இருக்கு. குடும்பம், குழந்தை என பந்தங்களுடன் வாழ வேண்டிய இந்த வயதில், அனைத்தையும் இழந்து, துறவு வாழ்க்கையை நான் ஏன் முடிவு பண்ணினேன்னு எனக்கு புரியவில்லை. மற்றவர்களின் குணத்தை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சி வேகத்தில் எடுத்த சில தவறான முடிவுகள், சூழ்நிலை இப்ப என்னை தனிமரமா ஆகிடுச்சு.

நான் கடைசி வரை இப்படிதான் இருப்பேனா?. இல்லை, மறுமணம் புரிந்து குடும்பவாழ்வில் இணைவேனா? எனது ஜாதகத்தில் எந்த மாதிரியான கொடுப்பினை உள்ளது என்று விரக்தியின் உச்சத்தில் கேட்டார்.

நான் ஜோதிடத்தை நம்பாதவள், தற்போது மனகுழப்பத்தில் தவித்துவரும் நிலையில், எனக்கான நல்ல ஆலோசனை வேண்டி ஜோதிடத்தை தற்போது நாடியுள்ளேன் என்று தழுதழுத்த குரலில் பேசினார்.

ஆன்மீகமா? இல்லறமா? எனக்கு எது ஒத்து வரும்? என்ற கேள்வியை தொடுத்து என் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று சாதகரீதியில் ஆய்வு செய்து தருமாறு கேட்டு இருந்தார்.

அந்த பெண்மணி பேசி முடிக்கும் வரை அவர் கூறுவதை பொறுமையாக கேட்டு அறிந்தேன். அவரின் மனநிலையை பார்க்கும் போது தனிமை வாழ்க்கை அவரை எவ்வளவோ பாதித்துள்ளது என்பதை உணர முடிகின்றது.

இவ்வளவு உயர்நிலையில் உள்ளவருக்கு வாழ்க்கையில் ஏன் நிறைவு இல்லை. முதல் திருமணம் ஏன் நிலைக்கவில்லை? குடும்பம், குழந்தை என பந்தங்களுடன் வாழ வேண்டிய வயதில், இவர் ஏன் தனிமையில் வாழ வேண்டும்? ஆன்மீக வாழ்வே போதும் என்றால் அவருக்கு சன்யாச யோகம் உண்டா? அல்லது குடும்ப பந்தத்தில் இணைய மறுமணம் பாக்கியம் உண்டா? இப்படி பல கேள்விகள் உங்களுக்கு எழும் அல்லவா.
வாருங்கள் அவரது சாதகத்தில் உயர் கணித சார ஜோதிட முறையில் விதிகொடுப்பினையை ஆய்வு செய்து அனைத்து கேள்விகளுக்கும் விடை அறிவோம்.

மனித வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் அனைத்திலும் முக்கியமானது திருமணம். ஒருவருடைய திருமண வாழ்க்கைதான் இந்த உலக வாழ்வை மகிழ்ச்சிகரமானதாகவும்; துக்ககரமானதாகவும் மாற்றக் கூடியது.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. மன எழுச்சியின் ஆதாரத்தில் நடப்பதல்ல திருமணம். #ஒழுக்கம், #மதம், #சமூகம் மற்றும் #விஞ்ஞான பூர்வமான கொள்கைகளின் படி நடப்பதுதான் திருமணம். இருமணமும் இணைவதுதான் திருமணம்.

நல்ல உடல் நலத்துடனும், மன வளத்துடனும், அன்பு செலுத்துபவராகவும், சகிப்பு தன்மை மிக்கவராகவும், குடும்ப பற்று மிக்கவராகவும், திருமண வாழ்வில் எவ்வித பிரச்சனையின்றி துன்பம் இல்லாத நிலை ஒருவருக்கு கிடைப்பது என்பது அரிதிலும் அரிது.

ஒருவர் எவ்வளவு படித்திருந்தும், செல்வந்தராகவும், செல்வாக்குமிக்கவராகவும், வானளாவிய அதிகாரமுடையவராக இருந்தாலும் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி என்பது இல்லை என்றால் நிம்மதியை இழக்கக்கூடும். அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்று வாழ்க்கையை எளிதாக கடந்துவிட முடியாது, வாழ்க்கையே துக்ககரமாக மாற்றிவிடும்..

சாதகரை குறிக்கக்கூடிய லக்னமும், வாழ்க்கை துணைவரை குறிக்கக்கூடிய ஏழாம் பாவமும் வலிமையாக சுப பாவங்களுடன் தொடர்பு பெற்று, நல்ல விதிகொடுப்பினையோடு பிறந்தவர்களுக்கு திருமண வாழ்வு யோகமாக அமைந்துவிடுகிறது. அது எப்படி என்றால்?
ரவிவர்மாவின்
தூரிகைக்கு
சிக்காத
ஓவியமே…!
பிரம்மனின்
கற்பனைக்கு
எட்டாத
படைப்பே…!
ஏழுலகமும்
கண்டிராத
அசையும்
சிற்பமே..!
தேவலோக
தேவதைகளும்
வியக்கும்
பேரழகியே…!
இமை மூடினாலும்
என் கருவிழியில்
சிறைப்பட்ட
பிம்பமே …!
என்ன தவம்
புரிந்தேனோ
என்னிதயத்தில்
குடிகொண்டாய்…!
உன் நினைவிலே
பிறவிக்கடலை
கடக்க
வரம் தாராயோ..!

என்று கவிதையில் குறிப்பிட்டுள்ளது போல் வாழ்க்கை துணையை வர்ணித்து, ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வை சந்தோஷமாகவும், நிறை மனதோடு மகிழ்ச்சியாக, இணைபிரியா தம்பதிகளாக வாழ்வர்.

இந்த பாவங்கள் வலிமை குன்றியவர்களுக்கு ஆலைக்குள் அகப்பட்ட சோலை கரும்புபோல் கசக்கி பிழிந்து வாழ்க்கையை சோதனையாக மாற்றிவிடுகிறது என்றால் வேறு என்ன சொல்ல? அது அவர் வாங்கிவந்த வரம் என்பார்கள்.

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாம்" என்பது போல் விதியின் சூழ்ச்சியை அறிந்து வாழ்வை சகித்து வாழத்தெரியாதவர்கள், இல்லற வாழ்வை துறந்து அவசரத்தில் துறவு வாழ்வில் தஞ்சம் அடைந்து, ஆசையை அடக்க முடியாமல் தவிப்பவர்கள் பல பேர். அலை கடலுக்கு அணை போட முடியுமா? இல்லை, ஆசையத்தான் அடக்க முடியுமா?

அழுதால் வெட்கம், சொன்னால் துக்கம் என்று மனசுக்குள்ளே குமுறிக்கொண்டு துறவு வாழ்விலும் நிம்மதியை தொலைத்து அற்புதமான வாழ்வை கெடுத்துக்கொண்டவர்கள் பலர். அன்று எழுதியவன் மீண்டும் அழித்து எழுத போகிறானா என்ன? வாழ்க்கையில் இணங்கினால் இனிப்பு, பிணங்கினாள் கசப்பு. இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்கு இல்லற வாழ்க்கை குதூகலிக்கும்.

துறவு நெறியைவிட இல்லற நெறியில் மண வாழ்க்கையில் இருக்கும் மனிதன் மிக உயர்ந்தவன் என நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மன நிம்மதியுடன் இருக்க பல்வேறு நிகழ்ச்சிகள் உதவவேண்டும். இவைகளில் எல்லாம் முதன்மையானது திருமணமாகும்.
சும்மாவா சொன்னார்கள்... "நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்று..." ஆக திருமணம் என்பது வரமே.

பெண்மணி அவர்களுக்கு முதல் திருமண பந்தம் ஏன் நிலைக்கவில்லை?


பெண்மணியின் சாதகத்தில் 7ம் பாவத்தின் கொடுப்பினையை ஆய்வு செய்த போது ஏழாம் பாவத்தின் புத்திநாதன் சந்திரனின் தொடர்பு (குறிப்பு: சந்திரன் உப நட்சத்திரமானால் பாவ தொடரபு தசா புக்திக்கு தக்கவாறு மாறிக்கொண்டே இருக்கும்)

ஏழாம் பாவ உப அதிபதி: சந்திரன்
பாவத் தொடர்பு: 3, 7

வாழ்க்கை துணையை குறிக்க கூடிய ஏழாம் பாவம் காலபுருஷ தத்துவத்தின் படி வளரும் பாவமான சர ராசியாகிய கடகத்தில். இது ஓர் நீர் ராசியும் கூட. காலபுருஷனின் விதிப்படி நான்காம் பாவமாகும். வாழ்க்கை துணையும் நான்காம் பாவ காரகத்திற்கு உரிய காரக குணங்களான உணர்ச்சிக்கு எளிதில் மயங்காத தன்மை, இதனால் #காதல், #ரசனை போன்ற உணர்வுகள் சற்று குறைவாகவே இருக்கும். எளிமையான வாழ்க்கையை விருப்புபவராக இருப்பார். இது ஒரு பொது தன்மையே.

7ம் பாவமுனை சந்திரனின் வீடான கடகத்தில் புதன் நட்சத்திரத்தில் சந்திரனின் உப நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. புதன் 6, 9 ,12 ம் ஆகிய பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்துள்ளது. நட்சத்திரம் சம்பவத்தை காட்டும். இங்கு 7ம் பாவம் நட்சத்திராதிபதி புதன் தன் பாவத்திற்கு 6,12ம் பாவங்களை தொடர்பு கொண்டது 7ம் பாவத்தின் அகம் சார்ந்த ஆற்றலை குறைக்கும். மேலும் 9ம் பாவத்தொடர்பு 7ம் பாவத்தின் பரிணாம வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதன் காரணமாக புதிய நபருடனான இணையும் சந்தர்ப்பம் வாழ்வில் ஏற்படும்.

7ம் பாவதின் காரகங்களை பெரும்பகுதி நிறைவேற்றும் கடமை அதன் உபாதிபதியையே சாரும். நிலையற்ற பலனை அளிக்கும் சந்திரன் பாவ உபாதிபதியாக அமைந்துள்ளது. இது தசா புக்திக்கு ஏற்றவாறு 7ம் பாவத்தின் கொடுப்பினையை மாறி மாறி வழங்கும். பொதுவாக 7ம் பாவத்தின் கொடுப்பினை நிலையானதாக அமைந்தால் தான் நீடித்த குடும்ப வாழ்வை வாழ்க்கை துணையுடன் அனுபவிக்க முடியும். அதற்கான கொடுப்பினை விதிப்படி பெண்மணியின் சாதகத்தில் இல்லை.

மேலும் இவர் பிறந்ததிலிருந்து எட்டு வயது வரை சந்திர தசை, பிறகு 15 வயது வரை செவ்வாய் தசை, இவையெல்லாம் குறுகிய கால தசைகள். இதில் வரும் புக்திகள் விரைவில் முடிவதால் சம்பவங்கள் குறிகிய காலத்தில் மாறி மாறி நிகழ்ந்துவிடும். இன்பமோ துன்பமோ நீண்ட நாள் நிகழாது, பெரும் பகுதி மாத கணக்கிலே நடந்து முடிந்துவிடும். ஆனால் அதன் பிறகு வந்த தசைகள் ராகு, குரு போன்ற நீண்ட கால தசைகள். புக்திகள் ஆண்டு கணக்கில் நடைபெறும். சாதகருக்கு தீமை விளைவிக்கும் புக்திகள் நின்று நிதானமாக விளையாடி செல்லும். வாழ்வையே புரட்டி போட்டுவிடும். இந்த பெண்மணியின் ஜாதகத்தில் பெரும்பாலான பாவங்கள் 4,6,9,12 ஆகிய பாவங்களுடன் தொடர்பு பெற்றது, மேலும் 6ம் மற்றும் 9ம் பாவம் வலிமை பெற்றதால் இது 7ம் பாவத்தின் செயலை துண்டித்துவிடும்.

சாதக அமைப்பை உற்று நோக்குகையில் 7ம் பாவத்தின் கொடுப்பினை அகம் சார்ந்த காரகங்களில் முழுமையாக வலிமை இழந்துள்ளது. வாழ்க்கை துணையை நிரந்தரமாக பிரியும் நிலையை விதிவழியாகவும், மதி என்னும் தசா புக்தி வழியாகவும் பெண்மணி அனுபவிக்க வேண்டியதாயிற்று. இதுவே முதல் திருமணம் நிலைக்காமல் போனதற்கு மேற்கண்ட ஆய்வின் மூலம் காரணமாக அறிய முடிகிறது.

பெண்மணியின் ஜாதகத்தில் தெய்வீக பாவங்களான 1, 5, 9ம் ஆகிய பாவங்களின் உபாதிபதி ஆன்மீக கிரகங்களான குரு, சனி, ராகு, கேது போன்ற கிரகங்களுடன் வலிமையான தொடர்புகொள்ளவில்லை. மாறாக இந்த பாவங்கள் பொருள் பற்றான பாவங்களுடன் வலிமையான தொடர்பை கொண்டுள்ளது.

9ம் பாவம் தன் பாவத்தையும், தன் பாவத்திற்கு 4ம் பாவமான 12ம், 7ம் பாவமான 3ம் மற்றும் 10ம் பாவமான 6ம் ஆகிய பாவங்களை தொடர்புகொண்டுள்ளதால் நீடித்த ஆன்மீக வாழ்வில் ஈடுபடலாம். ஆனால்
விட்டேன் உலக விரும்பேன் இரு வினை வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய்க்கெடாதநிலை
தொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான்மறைக்கும்
எட்டேன் எனும்பரம் தானே வன்தென்பால் எய்தியதே.
என்ற பட்டினத்தாரின் வரிகளுக்கு ஏற்ப இல்லறத்தை துறந்து முழுமையான சந்நியாசியாக உலக பற்றற்று செல்லும் நிலை இந்த பெண்மணியின் சாதகத்தில் விதிப்படி கொடுப்பினை இல்லை.

மறுமணம் என்றால் ஒன்பதாம் பாவத்தை ஆய்வு செய்ய வேண்டும். #ஆன்மீகம், இரண்டாம் #விவாகம் என்னும் ஒன்பதாம் பாவ உப நட்சத்திராதிபதி புதனின் பாவத்தொடர்புகள்
ஒன்பதாம் பாவ உப அதிபதி: புதன் (6,9,12)
நின்ற நட்சத்திரம்: புதன் (6,9,12)
நின்ற உப நட்சத்திரம்: சனி (3,8))
பாவத் தொடர்பு: 3,6,9,12

#மறுமண_யோகம் உண்டா என்று சிந்திக்கையில், அதை குறிக்கும் பாவமான 9ம் பாவ முனை, சுபிச்சகாரகன் சுக்கிரனின் வீடான வளரும் பாவமான சர மற்றும் காற்று ராசியான துலாத்தில் செவ்வாய் நட்சத்திரத்தில் புதன் உப நட்சத்திரத்தில் அமைந்துள்ளது.

ஒன்பதாம் பாவமுனை நட்சத்திராதிபதி செவ்வாய், 10ம் பாவ உபாதிபதி. இது 9ம் பாவத்தின் வளர்ச்சியை கெடுக்காமல் பிறவிருத்தியாக செயல்படும். மேலும் செவ்வாய் தொடர்புகொண்டுள்ள பாவங்களான 2, 5, 11ம் ஆகிய பாவங்களும் 9ம் பாவத்தின் ஆற்றலை தடுக்கவில்லை. மேலும் வலு சேர்க்கும் விதமாக சாதகமாகவே அமைந்துள்ளன.

பாவ காரகங்களை பெரும்பாலும் நிறைவேற்றும் பொறுப்புடைய புதன் தன் சுயநட்சத்திரத்தில் அமைந்தது 9ம் பாவத்திற்கு மிகுந்த வலிமையே. புதன் நின்ற உப நட்சத்திரம் சனி. இவர் 3 மற்றும் 8ம் பாவத்திற்கு உப உப அதிபதியாக அமைந்துள்ளது. நட்சத்திரம் காட்டிய சம்பவத்திற்கு சனியால் முழு எதிர்ப்பு காண்பிக்க இயலாது. காரணம் சம்பவத்தை நிகழ்த்தும் நட்சத்திரம் சமசப்தமமாக (3,9) தொடர்பு பெற்றதால். ஆக பெண்மணியின் சாதகத்தில் 7ம் பாவத்துடன் ஒப்பிடும் போது 9ம் பாவம் நல்ல வலிமையில் உள்ளது. இதன் மூலம் மேற்கண்ட ஆய்வின்படி பெண்மணிக்கு மறுமண யோகம் உண்டு என்பதை உறுதிப்படுத்தலாம்.

அடை மழைவிட்டும் செடிமழை விடவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப இல்லற வாழ்விற்க்கான ஏக்கமும் எதிர்பார்ப்பும் மன அலைகளாக உள்ளுக்குள் எழும்பிக்கொண்டே இருக்கும். 7ம் பாவ கொடுப்பினை கைவிட்டாலும் மறுமணம் என்னும் 9ம் பாவ கொடுப்பினை குடும்ப வாழ்வில் இணைய பெண்மணிக்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இவர் விரும்பினால் மறுமணம் புரிந்து வாழ்க்கைத் துணைவரோடு குடும்ப வாழ்வில் சிறப்பானதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இதுவரை முழு கட்டுரையை பொறுமையாக படித்ததற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது ஆசான், சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்,

திலக் ஜெ. பாலமுருகன் M.C.A., M.Sc (Yoga).,
+91 - 8825518634
Member, All India Stellar Astrology Association, Chennai.

வாழ்க வளமுடன்!