April 2022 ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Monday, April 4, 2022

தனி மரமா மறுமணமா-Familylife-or-spritualLife|ThilakJBalamurugan-KPAdvanceStellerAstrology

தனி மரமா? மறுமணமா?



"வாழ்க்கையில் இணங்கினால் இனிப்பு, பிணங்கினாள் கசப்பு. இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்கு இல்லற வாழ்க்கை குதூகலிக்கும்."

முப்பத்தி ஏழு மதிக்கதக்க நடுத்தர வயது பெண்மணி. அந்த பெண்மணி முனைவர் பட்டம் முடித்தவர். பிரபல தனியார் பல்கலையில் மேலாண்மை துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றுள்ளார். குழந்தை இல்லை. அதன் பிறகு திருமண பந்தத்தில் பிடிப்பில்லாமல், வேலையின் நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து சென்னையில் தனிமை வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்.

தனிமை வாழ்க்கை மிக பெரிய சவாலாக இருக்கு. மன அழுத்தத்தால் ரொம்ப கஷ்டப்படுகிறேன். இதே மாதிரி போனா என் எதிர்காலம் என்னா ஆகுமோன்னு பயமா இருக்கு. குடும்பம், குழந்தை என பந்தங்களுடன் வாழ வேண்டிய இந்த வயதில், அனைத்தையும் இழந்து, துறவு வாழ்க்கையை நான் ஏன் முடிவு பண்ணினேன்னு எனக்கு புரியவில்லை. மற்றவர்களின் குணத்தை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சி வேகத்தில் எடுத்த சில தவறான முடிவுகள், சூழ்நிலை இப்ப என்னை தனிமரமா ஆகிடுச்சு.

நான் கடைசி வரை இப்படிதான் இருப்பேனா?. இல்லை, மறுமணம் புரிந்து குடும்பவாழ்வில் இணைவேனா? எனது ஜாதகத்தில் எந்த மாதிரியான கொடுப்பினை உள்ளது என்று விரக்தியின் உச்சத்தில் கேட்டார்.

நான் ஜோதிடத்தை நம்பாதவள், தற்போது மனகுழப்பத்தில் தவித்துவரும் நிலையில், எனக்கான நல்ல ஆலோசனை வேண்டி ஜோதிடத்தை தற்போது நாடியுள்ளேன் என்று தழுதழுத்த குரலில் பேசினார்.

ஆன்மீகமா? இல்லறமா? எனக்கு எது ஒத்து வரும்? என்ற கேள்வியை தொடுத்து என் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று சாதகரீதியில் ஆய்வு செய்து தருமாறு கேட்டு இருந்தார்.

அந்த பெண்மணி பேசி முடிக்கும் வரை அவர் கூறுவதை பொறுமையாக கேட்டு அறிந்தேன். அவரின் மனநிலையை பார்க்கும் போது தனிமை வாழ்க்கை அவரை எவ்வளவோ பாதித்துள்ளது என்பதை உணர முடிகின்றது.

இவ்வளவு உயர்நிலையில் உள்ளவருக்கு வாழ்க்கையில் ஏன் நிறைவு இல்லை. முதல் திருமணம் ஏன் நிலைக்கவில்லை? குடும்பம், குழந்தை என பந்தங்களுடன் வாழ வேண்டிய வயதில், இவர் ஏன் தனிமையில் வாழ வேண்டும்? ஆன்மீக வாழ்வே போதும் என்றால் அவருக்கு சன்யாச யோகம் உண்டா? அல்லது குடும்ப பந்தத்தில் இணைய மறுமணம் பாக்கியம் உண்டா? இப்படி பல கேள்விகள் உங்களுக்கு எழும் அல்லவா.
வாருங்கள் அவரது சாதகத்தில் உயர் கணித சார ஜோதிட முறையில் விதிகொடுப்பினையை ஆய்வு செய்து அனைத்து கேள்விகளுக்கும் விடை அறிவோம்.

மனித வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் அனைத்திலும் முக்கியமானது திருமணம். ஒருவருடைய திருமண வாழ்க்கைதான் இந்த உலக வாழ்வை மகிழ்ச்சிகரமானதாகவும்; துக்ககரமானதாகவும் மாற்றக் கூடியது.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. மன எழுச்சியின் ஆதாரத்தில் நடப்பதல்ல திருமணம். #ஒழுக்கம், #மதம், #சமூகம் மற்றும் #விஞ்ஞான பூர்வமான கொள்கைகளின் படி நடப்பதுதான் திருமணம். இருமணமும் இணைவதுதான் திருமணம்.

நல்ல உடல் நலத்துடனும், மன வளத்துடனும், அன்பு செலுத்துபவராகவும், சகிப்பு தன்மை மிக்கவராகவும், குடும்ப பற்று மிக்கவராகவும், திருமண வாழ்வில் எவ்வித பிரச்சனையின்றி துன்பம் இல்லாத நிலை ஒருவருக்கு கிடைப்பது என்பது அரிதிலும் அரிது.

ஒருவர் எவ்வளவு படித்திருந்தும், செல்வந்தராகவும், செல்வாக்குமிக்கவராகவும், வானளாவிய அதிகாரமுடையவராக இருந்தாலும் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி என்பது இல்லை என்றால் நிம்மதியை இழக்கக்கூடும். அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்று வாழ்க்கையை எளிதாக கடந்துவிட முடியாது, வாழ்க்கையே துக்ககரமாக மாற்றிவிடும்..

சாதகரை குறிக்கக்கூடிய லக்னமும், வாழ்க்கை துணைவரை குறிக்கக்கூடிய ஏழாம் பாவமும் வலிமையாக சுப பாவங்களுடன் தொடர்பு பெற்று, நல்ல விதிகொடுப்பினையோடு பிறந்தவர்களுக்கு திருமண வாழ்வு யோகமாக அமைந்துவிடுகிறது. அது எப்படி என்றால்?
ரவிவர்மாவின்
தூரிகைக்கு
சிக்காத
ஓவியமே…!
பிரம்மனின்
கற்பனைக்கு
எட்டாத
படைப்பே…!
ஏழுலகமும்
கண்டிராத
அசையும்
சிற்பமே..!
தேவலோக
தேவதைகளும்
வியக்கும்
பேரழகியே…!
இமை மூடினாலும்
என் கருவிழியில்
சிறைப்பட்ட
பிம்பமே …!
என்ன தவம்
புரிந்தேனோ
என்னிதயத்தில்
குடிகொண்டாய்…!
உன் நினைவிலே
பிறவிக்கடலை
கடக்க
வரம் தாராயோ..!

என்று கவிதையில் குறிப்பிட்டுள்ளது போல் வாழ்க்கை துணையை வர்ணித்து, ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வை சந்தோஷமாகவும், நிறை மனதோடு மகிழ்ச்சியாக, இணைபிரியா தம்பதிகளாக வாழ்வர்.

இந்த பாவங்கள் வலிமை குன்றியவர்களுக்கு ஆலைக்குள் அகப்பட்ட சோலை கரும்புபோல் கசக்கி பிழிந்து வாழ்க்கையை சோதனையாக மாற்றிவிடுகிறது என்றால் வேறு என்ன சொல்ல? அது அவர் வாங்கிவந்த வரம் என்பார்கள்.

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாம்" என்பது போல் விதியின் சூழ்ச்சியை அறிந்து வாழ்வை சகித்து வாழத்தெரியாதவர்கள், இல்லற வாழ்வை துறந்து அவசரத்தில் துறவு வாழ்வில் தஞ்சம் அடைந்து, ஆசையை அடக்க முடியாமல் தவிப்பவர்கள் பல பேர். அலை கடலுக்கு அணை போட முடியுமா? இல்லை, ஆசையத்தான் அடக்க முடியுமா?

அழுதால் வெட்கம், சொன்னால் துக்கம் என்று மனசுக்குள்ளே குமுறிக்கொண்டு துறவு வாழ்விலும் நிம்மதியை தொலைத்து அற்புதமான வாழ்வை கெடுத்துக்கொண்டவர்கள் பலர். அன்று எழுதியவன் மீண்டும் அழித்து எழுத போகிறானா என்ன? வாழ்க்கையில் இணங்கினால் இனிப்பு, பிணங்கினாள் கசப்பு. இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்கு இல்லற வாழ்க்கை குதூகலிக்கும்.

துறவு நெறியைவிட இல்லற நெறியில் மண வாழ்க்கையில் இருக்கும் மனிதன் மிக உயர்ந்தவன் என நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மன நிம்மதியுடன் இருக்க பல்வேறு நிகழ்ச்சிகள் உதவவேண்டும். இவைகளில் எல்லாம் முதன்மையானது திருமணமாகும்.
சும்மாவா சொன்னார்கள்... "நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்று..." ஆக திருமணம் என்பது வரமே.

பெண்மணி அவர்களுக்கு முதல் திருமண பந்தம் ஏன் நிலைக்கவில்லை?


பெண்மணியின் சாதகத்தில் 7ம் பாவத்தின் கொடுப்பினையை ஆய்வு செய்த போது ஏழாம் பாவத்தின் புத்திநாதன் சந்திரனின் தொடர்பு (குறிப்பு: சந்திரன் உப நட்சத்திரமானால் பாவ தொடரபு தசா புக்திக்கு தக்கவாறு மாறிக்கொண்டே இருக்கும்)

ஏழாம் பாவ உப அதிபதி: சந்திரன்
பாவத் தொடர்பு: 3, 7

வாழ்க்கை துணையை குறிக்க கூடிய ஏழாம் பாவம் காலபுருஷ தத்துவத்தின் படி வளரும் பாவமான சர ராசியாகிய கடகத்தில். இது ஓர் நீர் ராசியும் கூட. காலபுருஷனின் விதிப்படி நான்காம் பாவமாகும். வாழ்க்கை துணையும் நான்காம் பாவ காரகத்திற்கு உரிய காரக குணங்களான உணர்ச்சிக்கு எளிதில் மயங்காத தன்மை, இதனால் #காதல், #ரசனை போன்ற உணர்வுகள் சற்று குறைவாகவே இருக்கும். எளிமையான வாழ்க்கையை விருப்புபவராக இருப்பார். இது ஒரு பொது தன்மையே.

7ம் பாவமுனை சந்திரனின் வீடான கடகத்தில் புதன் நட்சத்திரத்தில் சந்திரனின் உப நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. புதன் 6, 9 ,12 ம் ஆகிய பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்துள்ளது. நட்சத்திரம் சம்பவத்தை காட்டும். இங்கு 7ம் பாவம் நட்சத்திராதிபதி புதன் தன் பாவத்திற்கு 6,12ம் பாவங்களை தொடர்பு கொண்டது 7ம் பாவத்தின் அகம் சார்ந்த ஆற்றலை குறைக்கும். மேலும் 9ம் பாவத்தொடர்பு 7ம் பாவத்தின் பரிணாம வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதன் காரணமாக புதிய நபருடனான இணையும் சந்தர்ப்பம் வாழ்வில் ஏற்படும்.

7ம் பாவதின் காரகங்களை பெரும்பகுதி நிறைவேற்றும் கடமை அதன் உபாதிபதியையே சாரும். நிலையற்ற பலனை அளிக்கும் சந்திரன் பாவ உபாதிபதியாக அமைந்துள்ளது. இது தசா புக்திக்கு ஏற்றவாறு 7ம் பாவத்தின் கொடுப்பினையை மாறி மாறி வழங்கும். பொதுவாக 7ம் பாவத்தின் கொடுப்பினை நிலையானதாக அமைந்தால் தான் நீடித்த குடும்ப வாழ்வை வாழ்க்கை துணையுடன் அனுபவிக்க முடியும். அதற்கான கொடுப்பினை விதிப்படி பெண்மணியின் சாதகத்தில் இல்லை.

மேலும் இவர் பிறந்ததிலிருந்து எட்டு வயது வரை சந்திர தசை, பிறகு 15 வயது வரை செவ்வாய் தசை, இவையெல்லாம் குறுகிய கால தசைகள். இதில் வரும் புக்திகள் விரைவில் முடிவதால் சம்பவங்கள் குறிகிய காலத்தில் மாறி மாறி நிகழ்ந்துவிடும். இன்பமோ துன்பமோ நீண்ட நாள் நிகழாது, பெரும் பகுதி மாத கணக்கிலே நடந்து முடிந்துவிடும். ஆனால் அதன் பிறகு வந்த தசைகள் ராகு, குரு போன்ற நீண்ட கால தசைகள். புக்திகள் ஆண்டு கணக்கில் நடைபெறும். சாதகருக்கு தீமை விளைவிக்கும் புக்திகள் நின்று நிதானமாக விளையாடி செல்லும். வாழ்வையே புரட்டி போட்டுவிடும். இந்த பெண்மணியின் ஜாதகத்தில் பெரும்பாலான பாவங்கள் 4,6,9,12 ஆகிய பாவங்களுடன் தொடர்பு பெற்றது, மேலும் 6ம் மற்றும் 9ம் பாவம் வலிமை பெற்றதால் இது 7ம் பாவத்தின் செயலை துண்டித்துவிடும்.

சாதக அமைப்பை உற்று நோக்குகையில் 7ம் பாவத்தின் கொடுப்பினை அகம் சார்ந்த காரகங்களில் முழுமையாக வலிமை இழந்துள்ளது. வாழ்க்கை துணையை நிரந்தரமாக பிரியும் நிலையை விதிவழியாகவும், மதி என்னும் தசா புக்தி வழியாகவும் பெண்மணி அனுபவிக்க வேண்டியதாயிற்று. இதுவே முதல் திருமணம் நிலைக்காமல் போனதற்கு மேற்கண்ட ஆய்வின் மூலம் காரணமாக அறிய முடிகிறது.

பெண்மணியின் ஜாதகத்தில் தெய்வீக பாவங்களான 1, 5, 9ம் ஆகிய பாவங்களின் உபாதிபதி ஆன்மீக கிரகங்களான குரு, சனி, ராகு, கேது போன்ற கிரகங்களுடன் வலிமையான தொடர்புகொள்ளவில்லை. மாறாக இந்த பாவங்கள் பொருள் பற்றான பாவங்களுடன் வலிமையான தொடர்பை கொண்டுள்ளது.

9ம் பாவம் தன் பாவத்தையும், தன் பாவத்திற்கு 4ம் பாவமான 12ம், 7ம் பாவமான 3ம் மற்றும் 10ம் பாவமான 6ம் ஆகிய பாவங்களை தொடர்புகொண்டுள்ளதால் நீடித்த ஆன்மீக வாழ்வில் ஈடுபடலாம். ஆனால்
விட்டேன் உலக விரும்பேன் இரு வினை வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய்க்கெடாதநிலை
தொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான்மறைக்கும்
எட்டேன் எனும்பரம் தானே வன்தென்பால் எய்தியதே.
என்ற பட்டினத்தாரின் வரிகளுக்கு ஏற்ப இல்லறத்தை துறந்து முழுமையான சந்நியாசியாக உலக பற்றற்று செல்லும் நிலை இந்த பெண்மணியின் சாதகத்தில் விதிப்படி கொடுப்பினை இல்லை.

மறுமணம் என்றால் ஒன்பதாம் பாவத்தை ஆய்வு செய்ய வேண்டும். #ஆன்மீகம், இரண்டாம் #விவாகம் என்னும் ஒன்பதாம் பாவ உப நட்சத்திராதிபதி புதனின் பாவத்தொடர்புகள்
ஒன்பதாம் பாவ உப அதிபதி: புதன் (6,9,12)
நின்ற நட்சத்திரம்: புதன் (6,9,12)
நின்ற உப நட்சத்திரம்: சனி (3,8))
பாவத் தொடர்பு: 3,6,9,12

#மறுமண_யோகம் உண்டா என்று சிந்திக்கையில், அதை குறிக்கும் பாவமான 9ம் பாவ முனை, சுபிச்சகாரகன் சுக்கிரனின் வீடான வளரும் பாவமான சர மற்றும் காற்று ராசியான துலாத்தில் செவ்வாய் நட்சத்திரத்தில் புதன் உப நட்சத்திரத்தில் அமைந்துள்ளது.

ஒன்பதாம் பாவமுனை நட்சத்திராதிபதி செவ்வாய், 10ம் பாவ உபாதிபதி. இது 9ம் பாவத்தின் வளர்ச்சியை கெடுக்காமல் பிறவிருத்தியாக செயல்படும். மேலும் செவ்வாய் தொடர்புகொண்டுள்ள பாவங்களான 2, 5, 11ம் ஆகிய பாவங்களும் 9ம் பாவத்தின் ஆற்றலை தடுக்கவில்லை. மேலும் வலு சேர்க்கும் விதமாக சாதகமாகவே அமைந்துள்ளன.

பாவ காரகங்களை பெரும்பாலும் நிறைவேற்றும் பொறுப்புடைய புதன் தன் சுயநட்சத்திரத்தில் அமைந்தது 9ம் பாவத்திற்கு மிகுந்த வலிமையே. புதன் நின்ற உப நட்சத்திரம் சனி. இவர் 3 மற்றும் 8ம் பாவத்திற்கு உப உப அதிபதியாக அமைந்துள்ளது. நட்சத்திரம் காட்டிய சம்பவத்திற்கு சனியால் முழு எதிர்ப்பு காண்பிக்க இயலாது. காரணம் சம்பவத்தை நிகழ்த்தும் நட்சத்திரம் சமசப்தமமாக (3,9) தொடர்பு பெற்றதால். ஆக பெண்மணியின் சாதகத்தில் 7ம் பாவத்துடன் ஒப்பிடும் போது 9ம் பாவம் நல்ல வலிமையில் உள்ளது. இதன் மூலம் மேற்கண்ட ஆய்வின்படி பெண்மணிக்கு மறுமண யோகம் உண்டு என்பதை உறுதிப்படுத்தலாம்.

அடை மழைவிட்டும் செடிமழை விடவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப இல்லற வாழ்விற்க்கான ஏக்கமும் எதிர்பார்ப்பும் மன அலைகளாக உள்ளுக்குள் எழும்பிக்கொண்டே இருக்கும். 7ம் பாவ கொடுப்பினை கைவிட்டாலும் மறுமணம் என்னும் 9ம் பாவ கொடுப்பினை குடும்ப வாழ்வில் இணைய பெண்மணிக்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இவர் விரும்பினால் மறுமணம் புரிந்து வாழ்க்கைத் துணைவரோடு குடும்ப வாழ்வில் சிறப்பானதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இதுவரை முழு கட்டுரையை பொறுமையாக படித்ததற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது ஆசான், சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்,

திலக் ஜெ. பாலமுருகன் M.C.A., M.Sc (Yoga).,
+91 - 8825518634
Member, All India Stellar Astrology Association, Chennai.

வாழ்க வளமுடன்!

Sunday, April 3, 2022

சாமானிய வேதாத்திரி முதல் கோடீஸ்வர மகரிஷி வரை| VethathiriMaharishi Birth chart analysis in Advance KP Steller Astrology|ThilakJBalamurugan

  சாமானிய வேதாத்திரி முதல் கோடீஸ்வர

 மகரிஷி வரை 

பாகம் - 1


அன்புடையீர் வணக்கம், 

"கோள்களின் காந்த அலைகள் பிரபஞ்சத்தின் உள்ளே உந்தும் போது, பிரபஞ்சத்தின் அண்டமான பூமியின் ஈர்ப்பு விசையின் செயல்திறனால், பூ உலகில் தோன்றும் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு வகை உந்து விசையைப்  பெறுகின்றது. அத்தகைய காந்த சக்தியே கோள்களின் ஆற்றலாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு உயிரும் இம்மண்ணுலகில் வாழ்க்கையின் போக்கில் காணும் உயர்வு-தாழ்வு, ஏற்றம்-இறக்கம், புகழ்ச்சி-இகழ்ச்சி, துன்பம்-இன்பம் போன்ற மன உணர்வுகளுக்குக் காரணமாக கோள்களின் காந்த சக்தியே பிரதான காரணமாக அமைகின்றது." - வேதாத்திரி மகரிஷி 

தற்காலத்து மனிதர்கள் துன்பியல் நிறைந்த வாழ்வை இன்பமாக மாற்றிக் கொள்ளும் வழிமுறைகளை பலரும் பலவழிகளில் அறிய முயற்சித்து வந்துள்ளனர். அவ்வகையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுள் ஒருவரான தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி மனதின் வலிமையால் துன்பத்தை வெல்லலாம் என்கிறார்.  அதற்கான பல நடைமுறை பயிற்சிகளைம் கூறுகின்றார். 

பாலப்பருவதில் உணவுக்கு வழி இல்லாமல் பசியில் துவண்ட போதும், மத்திம வயதில் கடனில் தம் சொத்துக்கள் முழுவதையும் இழந்து நடு தெருவிற்கு வந்தபோதும், தன் ஆன்மீக பயணத்தில் கோடான  கோடி அன்பர்களை பெற்று பெரும் கோடீஸ்வர மகரிஷியாய் வாழ்ந்த போதும், நிகழ்ந்த சோதிட ரீதியான விளக்கங்களை முழுமையாக ஆராய்ந்து அறியும் போது "மனமே எனை நீ வாழ்வித்திடுவாய்" என்று பாரதியார் முழங்கிய கவிக்கு ஏற்றாற்போல் மகரிஷி அவர்கள் தம் மனதை செம்மையாக அமைத்துக்கொண்டு அவரது வாழ்வை வளமிக்கதாக மாற்றிக்கொண்டார் என்றால் அது மிகையாகாது.  

மகரிஷி அவர்கள் சிறுவயது தொடங்கி முக்தி அடையும் காலம் வரை வானியலில் காந்த அலை மாற்றத்திற்கு ஏற்ப அவரது வாழ்நாளில் ஏற்றமிகு வளர்ச்சிக்கான நிகழ்வுகளை, அவரது சாதக அமைப்பை உயர் கணித சார சோதிட முறையில் (Steller Astrology) இனி விரிவாக காணலாம். 


வேதாத்திரி மகரிஷியின் சாதக விவரம் 

நிகழும் விரோதிகிருது வருடம், தமிழ் மாதம் ஆடி 30ம் தேதி, திங்கள் கிழமை, கதிருதயாதி நாழிகை 1.54:22க்கு, ஆங்கில தேதி 14.08.1911, காலை 06:47:33 மணிக்கு, அமிர்தாதி யோகம் சித்த யோகத்தில், அமர பட்சத்து, சதுர்த்தி திதியில் பாலவ நாமகரணம், திருதிநாம யோகம், சந்திர ஹோரை, சிம்ம லக்னம், மீன ராசி, ஜென்ம நட்சத்திரம் உத்திரட்டாதி 4ம் பாதத்தில் தெய்வக் குழந்தை வேதாத்திரி சுப ஜனனம். 

தாயார் திருமதி. சின்னம்மாள், தந்தை திரு. வரதப்பன் ஆகியோர்க்கு எட்டாவது புதல்வராக, சென்னை-கூடுவாஞ்சேரியில் பிறந்தார். எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும் என்பார்கள். ஆனால் பழமொழியை பொய்ப்பிக்கும் விதமாக 'வேத வேழம்' என்று போற்றும்படியாக பிற்காலத்தில் வேத ஞானத்தில் நுண்மாண் நுழைபுலம் பெற்றவராக விளங்குவார் என கருதி, இவர் பெற்றோர்கள் "வேதாத்திரி" என்று திவ்யநாமத்தை சூட்டி மகிழ்ந்தனர். 


வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் பாவமுனை ராசிக்கட்டம்

வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் பாவமுனை ராசிக்கட்டம்

வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் பாவ ஆரம்ப முனைகள், கிரக நிலைகள்

வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் பாவ ஆரம்ப முனைகள், கிரக நிலைகள்

வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் கிரக தொடர்புகள்

வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் கிரக தொடர்புகள்

விதி கொடுப்பினை என்னும் பாவ தொடர்பு 

ஒரு மனிதனின் விதி என்ற கொடுப்பினையை, உயர்கணித சரஜோதிட விதிகளின் படி பாவத்தொடர்பு அட்டவணை மூலம் அறிந்தது கொள்ளலாம்., பாவத்தை முன்னின்று இயக்க கூடிய பலமிக்கவர்கள் முறையே பாவத்தின் உப அதிபதி (sub loard - SL), உப உப அதிபதி (sub sub loard - SSL), நட்சத்திரம் (Star loard) மற்றும் பாவத்தில் அமர்ந்த கிரகங்கள் ஆகியோர்கள் ஆவர்.

பாவ உப அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து மேலும் அசுப பாவங்களான எட்டாம் மற்றும் பன்னிரெண்டாம் பாவ தொடர்பு பெறவில்லை என்றால் அந்த பாவம் ஜாதகருக்கு முழு நன்மையை அளிக்கும். அந்த வகையில் மகரிஷின் சாதகத்தில் ஆன்மீக பாதையில் முழுமை அடையக்கூடிய முழு சுப தன்மையை அனைத்து பாவங்களும் 5ம் பாவம் என்னும் பூர்வபுண்ணிய மற்றும் 9ம் பாவம் என்னும் பாக்கிய ஸ்தானத்தை தொடர்பு கொண்டுள்ளது மிக சிறப்பு.


வேதாத்திரி மகரிஷியின் சாதகத்தில் விதி கொடுப்பினை என்னும் பாவ தொடர்பு

விதி கொடுப்பினை என்னும் பாவ தொடர்பு

வேதாத்திரி மகரிஷியின் பிறப்பு சாதகத்தில் முழு சுபரான தேவகுரு என்னும் வியாழனும், அசுரகுருவான சுக்கிரனும் பெரும்பகுதியான பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.  

வேதாத்திரி மஹரிஷியின் சாதகத்தில் ஒட்டுமொத்த விதி கொடுப்பினையை பார்க்கும் போது “கருவிலே திருவுடையவராக” அருட்பேராற்றலின் ஆசிபெற்றுள்ளதை அறிய முடிகிறது. பாசமிகு பெற்றோர்கள் மற்றும் உற்றார்கள், பெரிய குடும்பம், தீர ஆராய்ந்து முடிவு காணுதல், நற்காரியங்களில் ஈர்ப்பு கொள்ளும் ஆற்றல், நல்ஒழுக்கம் பேணுதல், வைராக்கியம், குடும்ப மேன்மை, சமூக சிந்தனை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல், சுயமுயற்சி, கடின உழைப்பு, பொருளாதாரத்தில் மேம்படவேண்டும் என்ற ஆவல், நட்பை போற்றும் நற்பண்பு, அனைவரிடத்திலும் மிகுந்த மரியாதை, ஆன்மீக தேடல், விடாமுயற்சியோடு செயல்படுதல், ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்ற கேள்விக்கணைகளை தனக்குள்ளே தொடுத்து முழு தீர்வு காணுதல், மனவலிமை, நீண்ட தியானம், யோகத்தில் ஈடுபடுதல், யோக முறையில் பழைய பழக்கத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி எளிமை ஆக்குதல், பிரபஞ்சத்தை தத்துவர்த்தவமாக நோக்குதல் போன்ற நற்குணங்களை மஹரிஷியின் சாதகத்தில் காணமுடிகிறது.

லக்னம் முதல் 12ம் பாவம் வரை விதிக்கொடுப்பினையின் ஆய்வை அடுத்த கட்டுரையில் (பாகம் -2) விரிவாக காண்போம்.

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன்,

என்றும் அன்புடன்,

திலக். ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (Yoga).,

Member, All India Steller Astrologer Association,

CHENNAI | TAMILNADU | INDIA Whatsapp : +91 - 8 8 2 5 5 1 8 6 3 4.


Saturday, April 2, 2022

எனது சொந்த ஊரில் மனவளக்கலை மன்றம் ஆரம்பித்து யோக கலையை போதிக்க விரும்புகின்றேன் - எனது ஆசை நிறைவேறுமா?

 எனது சொந்த ஊரில் மனவளக்கலை மன்றம் ஆரம்பித்து  யோக கலையை போதிக்க விரும்புகின்றேன் - எனது ஆசை நிறைவேறுமா?

அன்புடையீர் வணக்கம்,

ஆன்மீக வாழ்வில் அதிதீ பற்று உடையவர்கள் "யான் பெற்ற இன்பம் பெறுக இவையகம்" என்ற முது மொழிக்கு ஏற்றாற்போல் தான் அடைந்த பேரின்பத்தை மற்ற உயிர்களும் அடைய வேண்டும் என்று உயர்ந்த நோக்கோடு நினைப்பார்கள். அவ்வகையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஆன்மீக உள்ளுணர்வுக் கல்வியில் முது அறிவியல் பட்டம் என்னுடன் பயிலும் தோழி ஒருவரின் கேள்விதான் இது. எனது சொந்த ஊரில் மனவளக்கலை மன்றம் ஆரம்பித்து  யோக கலையை போதிக்க விரும்புகின்றேன் - எனது ஆசை நிறைவேறுமா? என்று தனது சாதகத்தில் அதற்கான விதிகொடுப்பினை உள்ளதா என்று ஆய்வு செய்து பலன் கூறுமாறு கேட்டார்கள்.


தோழி அவர்களின் பிறப்பு நேர சாதக விவரங்கள் 









பிறந்த தேதி

பிறந்த நேரம்

பிறந்த ஊர்

25-05-1993

7:42 AM

வண்ணாரப்பேட்டை - சென்னை.



மிதுன லக்னம், மிதுன ராசி மற்றும் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் 1ம் பாதம். இயற்கை சுபகிரகமான குருவின் நட்சத்திரம். அமிர்தாதி யோகம் சித்த யோகம்.



யார் ஆன்மீகதில் சிறந்து செயல்படுவார்கள்?


ஆன்மீகத்தில் ஒருவர் நீடித்து சிறந்து செயல்பட  வேண்டும் என்றல் லக்ன  பாவம் ஒருவரின் சுய சிந்தனையும், 5ம் பாவம் மந்திர உச்சாடனங்களையும், 9ம் பாவம் தெய்வ வழிபாடு, தத்துவ ஞானம் போன்றவற்றை குறிக்கும். அதனால் நம் முன்னோர்கள் 1, 5, 9 ஆகிய பாவங்களை தர்மஸ்தானங்கள் என்று அழைத்தார்கள்.


தர்மஸ்தானங்களான 1, 5, 9ம் ஆகிய பாவங்களுக்கு 12ம் பாவங்களான  4, 8 ,12ம் பாவங்கள் தெய்வ நம்பிக்கைக்கு எதிர்மறையான சிந்தனையை தரும். மேலும் ஆன்மீக வாழ்விற்கு எதிரான பலனை தரும். காரணம் இது பொருள் பற்றான பாவ கரகத்தை தந்து சாதகரை தியாக சிந்தனை அற்றவராக மாற்றிவிடும்.


1, 5, 9ம் பாவங்கள் வலிமை பெற்று அத்துடன் ஆன்மீக கிரகமான குரு சம்மந்தப்பட்டால் சாதகர் ஆன்மீக வாழ்க்கையை வாழ்வர். 1, 5, 9ம் பாவங்களுடன் சனி சம்பந்தப்பட்டால் சாதகர் ஆன்மீக வாழ்க்கையில் சன்யாச நிலையை மேற்கொண்டு பொருளாதார சிந்தனைகள் இல்லாத துறவு நிலையை மேற்கொள்வார்.



தோழி அவர்களின் சாதகத்தில் ஆன்மீகத்தில் உயர்ந்து சேவை செய்யும் கொடுப்பினை உள்ளதா?


ஆன்மீக வாழ்க்கைக்கு முக்கியமான தகுதிகள் பொருள் பற்றில்லாமல் தியாக சிந்தனையுடன், சேவை மனப்பான்மையுடன் குருவின் போதனைகளை தாம் வழுவாது கடைபிடித்து தெய்வ நம்பிக்கையுடன் சேவை புரிவதாகும். 


நல்லதோர் வீணை செய்தே- அதை

     நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

சொல்லடி சிவசக்தி-எனைச்

       சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ- இந்த

     மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி சிவசக்தி-நிலச்

      சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?


என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப நிலத்திற்கு பாரமாய் வாழ்ந்து மடியாமல்  எடுத்த பிறவி சமுதாயத்திற்கு ஏதேனும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்  தீவிர வேட்கையுடன் ஆன்மீக பணியாற்றிட வேண்டும் என்று தோழி அவர்கள் விரும்பினார்.


இந்த வகையில் தோழி அவர்களின் சாதகத்தில் அதற்கான கொடுப்பினை உள்ளதா என்று ஆய்வு செய்வோம்.



1ம் - லக்ன பாவம் 


1ம் பாவம் - உபய ராசியான மிதுனத்தில் ராகு நட்சத்திரத்தில் மற்றும் ராகு உப நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. லக்ன பாவ உபநட்சத்திரம் புதன்(9) நட்சத்திரத்தில், கேது (6, 12) உப நட்சத்திரத்தில் அமைந்து தொடர்பு கொண்ட பாவங்கள் 6, 9 ,12. காற்று ராசி லக்னமாக அமைந்ததால் சாதக புத்தி கூர்மையுடன் செயல்படுவார்.



லக்ன பாவ உப அதிபதி

நின்ற நட்சத்திரம்

நின்ற உப நட்சத்திரம்

பாவத் தொடர்பு

ராகு (1, 10)

புதன்(9)

கேது (6, 12)

6, 9, 12



லக்ன பாவ உப அதிபதி ராகு பத்தாம் பாவத்திற்கும் உபாதிபதியாக அமைந்ததால் 10ம் பாவத்தில் உள்ள கெளரவம், அந்தஸ்து பொறுப்பு மிக்க ஆலோசகர் போன்ற குண இயல்பினை சார்ந்து சாதகர் செயல்படுவார்.


மேலும் ஒன்றாம் பாவ உப நட்சத்திராதிபதி ராகுவின் காரகங்கள் சாதகரை எதிலும் பிரமாண்டமான சிந்தனை, எண்ணம், செயல், உடல் உறுப்புகள் அதீத வளர்ச்சி போன்ற விளைவுகளை சாதகரின் லக்னம் சார்ந்து வழங்குவார். இது கிரக காரக ரீதியில் சாதகர் அனுபவிப்பர்.


1 -> 6ம் பாவ தொடர்பு : சாதகர் எதிலும் வெற்றி வேட்கை, தனித்து செயல்படுதல், ஆரோக்கிய சிந்தனை, அதீத உணவு மற்றும் ஆடை வேட்கை போன்ற ஆறாம் பாவத்தில் உள்ள லக்ன பாவ காரகங்கள் ராகுவின்  காரகத்திற்கு ஏற்றார் போல் செயல் படும்.


1 -> 9ம் பாவ தொடர்பு : நம்பிக்கை, புகழ் ஆராய்ச்சித்திறன், தெய்வ நம்பிக்கை, பழமையை விரும்புதல், அந்நியருடன் நெருங்கி பழகுதல் போன்ற குண இயல்புகள் சாதகரிடம் காணப்படும்.


1 -> 12ம் பாவ தொடர்பு : ரகசிய செயல்களில் ஈடுபடுதல், தன்னையே அர்பணித்தல், தோல்வி தடையை சந்தித்தல் போன்ற காரகங்கள் சாதகருக்கு ராகு வின் காரகங்களுக்கு ஏற்றார் போல் அமையும்.


1ம் பாவம் -> 6, 9,12ம் ஆகிய பாவங்களை தொடர்பு கொடுள்ளது சாதகரின் சிந்தனை மேற்குறிப்பிட்ட காரகங்களின் கலவையாக தனது வாழ்வில் மேற்கொள்வார்.



5ம் பாவம் 


ஐந்தாம் பாவம் காற்று ராசியான துலாத்தில் செவ்வாய் நட்சத்திரத்தில் சூரியனின் உபநட்சத்திரத்தில் அமைந்துள்ளது. பாவ காரகங்களை ஏற்று நடத்தும் உபாதிபதி சூரியன் மனோகாரகன் சந்திரனின் நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரத்தில் அமைந்துள்ளது. சந்திரன் எந்த பாவத்திற்கும் நட்சத்திர மற்றும் உபாதிபதியாக வரவில்லை. அமர்ந்த இடத்தின் பலனை சூரியனுக்கு வழங்குவார். அந்த வகையில் சந்திரன் அமர்ந்த இடம் லக்ன பாவம்.


ஐந்தாம் பாவ உப அதிபதி

நின்ற நட்சத்திரம்

நின்ற உப நட்சத்திரம்

பாவத் தொடர்பு

சூரியன் (5)

சந்திரன்(1)

சந்திரன்(1)

1, 5, 11



ஐந்தாம் பாவத்துடன் சம்பந்த பட்ட சூரியன் அரசு ஆலயங்கள், அரசியல், ஆன்மிகம், கலை சார்ந்த நிகழ்வுகள், தலைமை தாங்குதல், விளையாட்டு போட்டி போன்ற நிகழ்வுகளில் மற்ற கிரக தொடர்புகளுக்கு ஏற்றவாறு தனது காரகங்களை ஐந்தாம் பாவ வழியாக செயல் படுத்துவார். அந்த வகையில் தோழி அவர்களின் சாதகத்தில் ஐந்தாம் பாவம் ஒற்றை படை தொடர்பினால் ஆன்மிகம் மற்றும் யோக கலை சார்ந்த செயல்களில் ஈடுபடுத்தியது, லகினம் சம்பந்த பட்டதால் யோகத்தில் நாட்டம், தெய்வ பாடல்களின் மீது ஆர்வம், பக்தி செலுத்துவதில் தீவிர வேட்கை, ஆன்மீக தொண்டில் நாட்டம் போன்றவை தோழி அவர்களின் சிந்தனையில் விதிவழி மன பதிவுகள் ஏற்பட்டுள்ளதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகின்றது.


5 -> 1ம் பாவ தொடர்பு : சுயமான ஆழ்ந்த சிந்தனை உடையவர், சிறப்பான கலைப்பணி செயல்கள், எதையும் கலைநயமாக வைத்தல், தனது தேவைக்கு அதிகமான உபயோகமான கலைகளை கற்றல் போன்ற காரகங்களை ஐந்தாம் பாவம் லக்கின பாவம் தோடு தொடர்பினால் இதன் அடிப்படையில் சாதகரை செயல்படுத்தும்.

5 -> 5ம் பாவ தொடர்பு : கலைச்சார்புடைய செயல்களில் ஈடுபடுதல். ஆழ்ந்த சிந்தனை, சமய சடங்குகளில் கலந்துகொள்ள, ஆன்மீக மற்றும் கலை சார்ந்த விஷங்களை மற்றவர்க்கு போதித்தல் போன்ற காரகங்களை சூரியனின் காரகங்களோடு பாவத்தில் இயல்புப்படி ஐந்தாம்பவம் சாதகரை செயல்படுத்தும்.


5 -> 11ம் பாவ தொடர்பு : கலைகள் சார்ந்து சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புகொள்ளுதல், நிகழ்ச்சிகளில்  பங்கேற்றல் போன்ற காரகங்கள் 5ம் பாவம் 11ம் பாவத்தொடர்பினால் நிகழும்.


ஐந்தாம் பாவம் 1, 5, 11ம் ஆகிய உயிர் பற்றான பாவங்களுடன் தொடர்பு பெற்றது கலை சார்ந்த விஷயங்களில் அதீத நாட்டம் உடையவராக இருப்பர். அதில் உள்ள நுணுக்கங்களை நம்பிக்கையுடன் கற்று பிறருக்கு கற்பிக்கும் தகுதியையும் தோழி  பெறுவார் என்பதை அவரது சாதகத்தில் ஐந்தாம் பாவம் உணர்த்துகின்றது.




9ம் பாவம்


தெய்வ வழிபாடு, சமயச் சார்பு, தியானம், தத்துவ மார்க்கம், தத்துவ ஞானம், ஆன்மீக சேவை போன்ற காரங்களை ஒன்பதாம் பாவ உபாதிபதி நிகழ்த்துவார். தோழி அவர்களின் சாதகத்தில் ஒன்பதாம் பாவம் ஒற்றைப்படை பாவங்களான 1, 3, 9ம் பாவங்களின் தொடர்பு முழுமையான ஆன்மீக வாழ்விற்கு உதவும் மேலும் அதை சார்ந்து ஆன்மீக தொண்டாற்றிட ஒன்பதாம் பாவம் சாதகமாக உள்ளது. 


தோழியின் சாதகத்தில் ஆன்மீக பாவமான ஒன்பதாம் பாவமுனை  சனியின் வீடான ஸ்திர மற்றும் காற்று  ராசியான கும்பத்தில் செவ்வாய் நட்சத்திரத்தில் மற்றும் புதன் உபநட்சத்திரத்தில் அமைந்துள்ளது.



ஒன்பதாம் பாவ உப அதிபதி

நின்ற நட்சத்திரம்

நின்ற உப நட்சத்திரம்

பாவத் தொடர்பு

புதன் (9)

சந்திரன்(1)

சுக்கிரன் (3)

1, 3, 9



9 -> 1ம் பாவ தொடர்பு : நல்ல ஆன்மீக சித்தனை, சுய ஆராய்ச்சி மேற்கொள்ளல், ஆன்மீக சிந்தனையில் மேலோங்குதல்.


9 -> 3ம் பாவ தொடர்பு : தனது சக்திக்கு அதிகமானவற்றை சிந்தித்தல், ஆன்மிகம் சார்ந்த விஷங்களை எழுதுதல், ஆன்மீக தகவல்களை பரிமாறிக்கொள்ளல்.

9 -> 9ம் பாவ தொடர்பு : மத சார்புடைய விஷயங்களில் அதிக நாட்டம் கொள்ளல், ஆன்மிக கல்வியில் உயர் கல்வி பயிலுதல் மற்றும் பயிற்சி பெறுதல்.


புதன் + சந்திரன் + சுக்கிரன் ஆகிய சம்சார வாழ்விற்கு ஏதுவான கிரகம் ஒன்பதாம் பாவத்துடன் சம்பந்தபட்டுள்ளதால் தோழி அவர்கள் குடும்ப வாழ்வில் இணைந்து அதனுடன் ஆன்மீக உணர்வு ரீதியாக வாழ்வார். மேலும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு படி படியாக ஆன்மீகத்தில் உயர்வார் ஆனால் முழுமையான சன்யாச வாழ்விற்க்கோ தனித்த யோக சாதனை புரிந்து ஆன்மீக குரு நிலை அடைவதற்க்கோ விதிப்படி கொடுப்பினை சற்று மிகுதியாக வேண்டும்.


தோழியின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நமது ஆய்வின் இறுதிக்கு வந்தாகிவிட்டது. மேலே குறிப்பிட்ட 1, 5 ,9ம் ஆகிய தர்மஸ்தானங்கள் நல்லநிலையில் உள்ளன. ஆன்மிகம் மற்றும் யோக கலை சேவைக்கு சாதகமாக உள்ளன.  பொருளாதார நோக்கம் இன்றி சேவை மனப்பான்மையோடு வேதாத்திரி மகரிஷி தோற்றுவித்த மனவளக்கலை மன்றத்தை  ஏற்படுத்தி ஆன்மீக தொண்டாற்றி தானும் இந்த சமுதாயமும் உயர்ந்திட வேண்டும் என்ற தோழியின் உன்னதமான உயந்த நோக்கம் நிறைவேறிடும் என்று சாதக ஆய்வின் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது.


இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன். எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன், என்றும் அன்புடன், திலக். ஜெ.பாலமுருகன் MCA., M.Sc (Yoga)., Member, All India Stellar Astrologer Association, CHENNAI | TAMILNADU | INDIA Whatsapp : +91 - 8 8 2 5 5 1 8 6 3 4.