ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Saturday, April 2, 2022

மானுட வாழ்வில் நவகிரகங்களின் ஆளுமை

மானுட வாழ்வில் நவகிரகங்களின் ஆளுமை

மானுட வாழ்வில் நவகிரகங்களின் ஆளுமை | aanmeegathathuvangal | kpadvancestellerastrology | basic astrology


அன்புடையீர் வணக்கம், 

வானில் பூமிக்கு அருகாமையில் சுயமாக பிரகாசிக்கக் கூடிய நட்சத்திரத்தை சூரியன் என்று அழைக்கின்றோம். இந்த சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால் தனது குடும்பத்தில் உள்ள கோள்களுடன் சேர்ந்து, வான மண்டலத்தில் நீள் வட்டப் பாதையில் அமைந்துள்ள பால்வெளிப் பாதையில் இடைவிடாது நகர்ந்து வலம் வருகின்றனது. இதனால் ஜோதி + இடம் = ஜோதிடம் என்று பராசரர் காலத்திலிருந்து கூறப்படுகின்றது.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நமது ரிஷிகள், முனிவர்கள் போன்றோர் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை உற்று நோக்கி, விண்ணுலகத்தில் தோன்றுபவைக்கும் மண்ணுலகத்தில் நிகழ்பவைக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்தார்கள். இராசி மண்டலத்திலுள்ள அக்கிரகங்களை ஒரு நிலைப்படுத்தி, அவற்றால் பூமியிலுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களுக்கு விளையும் பயன்களை அறியக் கூடிய ஒரு வழி முறைகளை அவர்கள் வகுத்தார்கள்.


நாம் நடைமுறையில் நமது பூமிக்கு நேர் கிழக்கில் உதயமாகும் புள்ளியை இலக்னம் என்கிறோம். சூரியனை சுற்றி வரும் பூமி ஒரு நாளில் தனது அச்சில் 360 பாகையை மிக விரைவாக ஒரு சுற்று சுற்றி வருவதின் அடிப்படையில் இலக்னம் கணிக்கப்படுகின்றது.


மிக விரைவாக செல்லும் சூரியனை வைத்து லக்ன நட்சத்திரம் என்றும், அடுத்தபடியாக விரைவாக செல்லும் சந்திரனை வைத்து ராசி நட்சத்திரம் என்றும், இலக்னம் மற்றும் ராசிக்கு முக்கியத்துவம் கொடுத்து லக்னத்தை விதி என்றும், கிரகங்களை கதி என்றும், சந்திரனை மதி என்றும் ஜோதிட இயலில் தத்துவங்களை உருவாக்கியுள்ளனர்.



இராசி சக்கரம் எவ்வாறு அமைந்தது


நாம் பூமியில் வாழ்வதற்கு மிக அவசியமானது பஞ்சபூதங்கள். இவற்றின் இயக்கங்கள் பூமியில் இருப்பதால் தான் நாம் வாழமுடிகிறது என்பதை கருத்தில் கொண்டு முதன் முதலாக இராசி சக்கரத்தை அமைக்க அடிப்படையான கருத்துக்களை வைத்து கீழ் கண்டவாறு அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.


பஞ்சபூதங்களில் நெருப்பு, பூமி, காற்று, நீர் ஆகிய நான்கு பூதங்கள் இராசியை ஆளுமை செய்கின்றன. ஆகாயத்தை பால்வெளி பாதையில் உள்ள நட்சத்திரங்கள் ஆளுமை செய்கின்றன.


ராசியை வைத்து சரம், ஸ்திரம், உபயம் என்ற மூன்று இயக்கங்களை இணைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.


இராசியை ஆளுமை செய்யும் நான்கு பூதங்களையும், மூன்று இயக்கங்களையும் வைத்து பன்னிரண்டு ராசிகளை உருவாக்கினார்கள்.மூன்று இயக்கமும், ஒன்பது கோள்களையும் வைத்து இருபத்தி ஏழு நட்சத்திரங்களைப் பகுத்தனர். நான்கு பூதங்களும், இருபத்தியேழு நட்சத்திரங்களையும் வைத்து நான்கு பூதங்களுக்கு பகிர்ந்து நூற்றிஎட்டு  பாதங்களாக பகுத்தனர்.



உபயம்

நீர்

சரம்

நெருப்பு


ஸ்திரம்

பூமி


உபயம்

காற்று


ஸ்திரம்

காற்று

காலச் சக்கரம்


சரம்

நீர்


சரம்

பூமி


ஸ்திரம்

நெருப்பு


உபயம்

நெருப்பு


ஸ்திரம்

நீர்


சரம்

காற்று


உபயம்

பூமி



அதாவது 


  • 4 பூதங்கள் x 3 இயக்கங்கள் = 12 ராசிகள் 

  • 3 இயக்கங்கள் x 9 கோள்கள் = 27 நட்சத்திரங்கள் 

  • 4 பூதங்கள் x 27 நட்சத்திரங்கள் = 108 பாதங்கள் 


மேற்கண்டவாறு கிரகம், நட்சத்திரம், பூதங்கள், இயக்கம், பாதம் முதலியவைகளை வைத்து இராசிச் சக்கரத்தை நம் முன்னோர்கள் வடிவமைத்தனர்.



பணிரெண்டு ராசிகளின் பெயர்கள் 


மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என இராசிகளுக்கு பெயர் சூட்டியுள்ளனர். 





மீனம் 

மேஷம்


ரிஷபம்


மிதுனம்


கும்பம்

இராசி சக்கரம்


கடகம்


மகரம்


சிம்மம்


தனுசு


விருச்சிகம்


துலாம் 


கன்னி




கோள்களை எவ்வாறு வரிசைப்படுத்தினார்கள் 


கிரகங்கள் சூரியனின் ஈர்ப்புக்கு கட்டுப்பட்டு சூரிய குடும்பத்தை விட்டு விலகாமல் தனக்கென உள்ள நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. கிரகங்கள் சூரியனில் இருந்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. சூரியனை கோள்களின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர சூரியன் சுயமாக ஒளிவீசும் ஒரு நட்சத்திரம் ஆகும்.


1) சூரியன்  2) புதன்  3) சுக்கிரன்  4) பூமி ( சந்திரன் )  5) செவ்வாய்  6) குரு  7) சனி என கிரகங்கள் வரிசையாக அமைந்துள்ளன.



நட்சத்திரங்களை எவ்வாறு தேர்வு செய்துள்ளனர் 


பால்வெளிப் பாதையில் உள்ள நட்சத்திர கூட்டங்களால் நமது சூரிய குடும்பத்திற்கு தொடர்புடைய நட்சத்திர கூட்டங்களை தேர்வு செய்து ராசியில் நட்சத்திரமும் வரிசைப்படுத்தி கொடுத்துள்ளனர். ஒவ்வொரு நட்சத்திரங்களும் கிரகங்களை காந்த அலைகளால் சலனப்படுத்துவதை அறிந்து அந்தந்த நட்சத்திரத்திற்கு தொடர்புடைய கிரகத்தை நட்சத்திர அதிபதியாக கொடுத்துள்ளனர்.



நட்சத்திரங்கள்

நட்சத்திர அதிபதி

1. அஸ்வினி

10. மகம்

19. மூலம்

கேது

2. பரணி

11. பூரம்

20. பூராடம்

சுக்கிரன்

3. கார்த்திகை

12. உத்திரம்

21. உத்திராடம்

சூரியன்

4. ரோகிணி

13. அஸ்தம்

22. திருவோணம்

சந்திரன்

5. மிருகஷீரிடம்

14. சித்திரை

23. அவிட்டம்

செவ்வாய்

6. திருவாதிரை

15. சுவாதி

24. சதயம்

ராகு

7. புனர்பூசம்

16. விசாகம்

25. பூரட்டாதி

குரு

8. பூசம்

17. அனுஷம்

26. உத்திரட்டாதி

சனி

9. ஆயில்யம்

18. கேட்டை

27. ரேவதி

புதன்



சூரிய உதயத்தின் பொழுது பூமியில் எந்த கோள்களின் காந்த அலை அழுத்தம் (Intensity) அதிகமாக இருக்கின்றதோ, ஆட்சி செய்கின்றதோ அந்த கோள்களின் பெயரால் அன்று கிழமை அழைக்கப்படுகின்றது. உதாரணமாக ஞாயிறன்று காலை 6-7 சூரிய ஓரையாக இருக்கும். முறையே திங்கள் காலை 6-7 சந்திர சாரையாக இருக்கும். இந்த அடிப்படையில் வார நாட்களை நம் முன்னோர்கள் அமைத்திருக்கின்றார்கள்.


இந்த பிரபஞ்ச ஆற்றல்கள் அனைத்தும் கோள்கள் மூலமாக நமக்கு கிடைக்கின்றன. கோள்களில் இருந்து வருகின்ற காந்த அலைகள் மனிதனுடைய அனைத்து பகுதியையும் ஆளுமை செய்கின்றன. சூரியனிலிருந்து வருகின்ற அலை - எலும்புகளோடும்; புதன் தோல்மீதும்;  சுக்கிரன் - ஜீவசக்தியோடும்; சந்திரன் - இரத்த ஓட்டத்திலும்; செவ்வாய் - எலும்பிலுள்ள மஜ்ஜையோடும்; குரு - மூளை செல்களோடும்; சனி - நரம்புகளோடும்; ராகு, கேது - மனதோடும் தொடர்பு கொள்கின்றன இவ்வாறாக மானுட வாழ்வில் கோள்களின் ஆளுமை ஆதிக்கம் செலுத்துகின்றன என்று முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.


இதுவரை முழு கட்டுரையை பொறுமையாக படித்ததற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது ஆசான், சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்,


என்றும் அன்புடன்,


திலக் .ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (YOGA).,

Member, All India Steller Astrologers Association .,

Chennai - India.

Whatsapp : +91 - 8825518634


திருக்குறளும் வேதாத்திரிய காந்தவியல் கோட்பாடும்

திருக்குறளும் வேதாத்திரிய காந்தவியல் கோட்பாடும் 

அன்புடையீர் வணக்கம்,

மனித வாழ்க்கை நெறியை ஆன்மீக பெருமக்கள் பலர் விளக்கிச் சென்றுள்ளனர் அவற்றுள் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க்கை நெறியை வகுப்பதில் சிறந்து விளங்குகின்றார். இப்படி பலர் விளக்கியும் மனிதர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள் இருக்கவே செய்கின்றன. ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி ஆகிய நான்கு  வகையிலும் திறன் பெற்ற அறிஞர்கள் கூறும் வழிகளை அவரளவு உயர்வதற்கு முயல்பவர்கள் அந்நெறிக்குச் செல்ல முடியும்.


மனமும் அறிவும் இரு எல்லைகளில் நிற்பதால் நெருக்கடிகள் மிகுகின்றன. மனம் அறிவை நோக்கிச் செல்லவேண்டும் என்னும் கொள்கையுடைய மகரிஷி, திருக்குறள் வாழ்க்கை நெறியை வகுத்த நூல்களுள் தலைசிறந்தது என்னும் கருத்துடையவர். திருக்குறளை முறையாக அறிந்தாலே உலக வாழ்க்கை அமைதிப்படும்.


திருக்குறளுக்கு உரை காண முற்பட்ட மகரிஷிக்கு அவற்றுள் ஒரு குறட்பா மிகப்பெரும் கட்டுரையை எழுத வைத்துள்ளது. அந்த குறட்பதான் 


சுவையொளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


என்னும் குறள் "சுத்தவெளியாக சிவமாக அமர்ந்து அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் அருட்பேராற்றலே தனக்குள் அறிவாக விளங்குகிறது" என்னும் உண்மையை இக்குறள் விளக்குவதாக மகரிஷி கருதுகிறார்.



தத்துவ சொற்கள் என்றால் என்ன? 


மேற்குறித்த குறளுக்கு விளக்கம் அறியும் முன் மெய்ப்பொருள், விண், காந்தம், அறிவு, பருவுடல் ஆகிய ஐந்து சொற்களுக்கும் விளக்கம் அறிய வேண்டும். இவை தத்துவ சொற்கள் என உணர்ந்து விளங்கிக் கொண்டு பதித்துக்கொள்ள வேண்டும் என்று மகரிஷி வலியுறுத்துகின்றார்.



மெய்ப்பொருள்


மெய்ப்பொருளின் விளக்கத்தை மகரிஷி இவ்வாறாக "மெய்ப்பொருள் என்பதே மறைப்பொருள். இம்மெய்ப்பொருளை மனம் எவ்வாறு உணர வேண்டும் என்றல் 'சுத்தவெளி' என்று உணரவேண்டும். இந்த சுத்தவெளி எல்லை இல்லாதது; முழுமுதற்பொருள்; ஆதி; அநாதி; இறைநிலை என்று வழங்கப்பெறும். இந்த சுத்தவெளியுள் அடங்கி இருப்பன சிவம், பூரணம், பிரம்மம், உண்மை, நித்தியம், முற்றறிவு ஆகியன. இவற்றின் வலிமைகளைகே கொண்டுடிருப்பது சுத்தவெளி விண்ணுக்குள்ளும் விண்களுக்கிடையேயும் பேரியக்க மண்டலத்திலும் இது நிறைந்து இருக்கும்.பேரியக்க மண்டலத் தோற்றங்களை எல்லாப் பக்கத்திலிருந்தும் அழுத்துவது, அழுதுவதோடு  தான் இயங்கி கொண்டிருப்பதும் இந்த சுத்தவெளி. இதனுள் அறிவு, விரைவு ஆகிய இரு தன்மைகள் உள்ளன. இவற்றையெல்லாம் மனத்தால் உணர்ந்து கொள்ள வேண்டும்" என மகரிஷி விளக்குகின்றார்.



விண்


விண் என்பது மிகமிக நுட்பமான ஒரு கூறாகும். இது இயக்க மூலக் கூறு ஆகும். இதைவிட சிறியது இல்லை. அனால் பேரியக்க மண்டலத்தின் எல்லா ரகசியங்களையும் அடக்கிக்கொண்டிருப்பது. இத்துகள்கள் இணைந்து தொகுப்பாகத் தோன்றும். விண் என்னும் இந்த கூறினை (துகளினை) உயிர், சக்தி, சூக்குமம், பரமாணு, ஆகாசம், ஆவி ஆகிய பெயர்களால் அழைப்பர். முன்னர்க் குறித்த மெய்ப்பொருள் என்னும் இருப்பு நிலையிலிருந்து பிளவுபட்டு வரும் கூறு இது. சூழல் விரைவொடு இயங்குவது. மிக நுனியை சூழல் அலை இது.



காந்தம் 


காந்தம் எனப்படுவது விண்துகளில் இருந்து சுழல்வதால் ஏற்படும் விரிவு அலை பக்கவாட்டிலுள்ள சுத்தவெளியில் ஊடுருவி இணைந்து இரண்டும் சேர்ந்த கூட்டு ஆற்றலாக விளங்குவதாகும். சுத்தவெளியும் இருக்கும். கூட்டு ஆற்றலான காந்தமும் இருக்கும்.விண்துகளும்  இருக்கும். சுத்தவெளியில் விண்களுக்கிடையில் பேரியக்க மண்டலத்தில் இந்தக் கூட்டு ஆற்றலான காந்தம் இருக்கும். இதனையே மகரிஷி வாங்கதம் என்று அழைக்கின்றார். இதே கூட்டு ஆற்றல் உயிரருடலுக்குள் எல்லைக்கட்டி இயங்குவதால் அதனைச் சீவகாந்தம் என்கிறார். கூட்டு ஆற்றலால் காந்தம் விளைந்தது.


அந்தக் காந்தத்திலிருந்து மேலும் சில விளையும். அவை அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம்  ஆகியன. காந்த ஆற்றல் குவிந்து அழுத்தம் பெரும் அதே இடத்தில் காந்த ஆற்றல் சமனடையும். காந்த ஆற்றல் அழுத்தம், மின்சத்தி, விதித்தல் (இரசாயணம்) என்னும் மூன்று தன்மைகளை பெறுகிறது. அழுத்தம் கொள்ளும் ஆற்றல், தள்ளும் ஆற்றல் என் இருவகையாக விளங்கும். மின்சக்தி, ஒளி, ஒலி என இரண்டாக இயங்கும். வேதித்தல், சுவை மணம் என இரண்டாக பிரிந்து இயங்கும்.



அறிவு 


அறிவு என்பதற்கு உண்மை என்று பொருள் கூறுகின்றார் மகரிஷி. உணர்ச்சி, சிந்தனை, இன்ப துன்ப அனுபவமாக உள்ளவற்றை அறிவு என்பர். இவை மனநிலைகள். இம் மனநிலைகளுக்கு முன்னமே விண் முதல் கதிரவன் வரை உள்ள இயக்க ஒழுங்காற்றலாகத் திகழ்வது அறிவு. விண்துகளின் இயக்கமற்ற நடுப்பகுதியை அறிவு எனலாம்.


இந்த இருப்புநிலை அல்லது அறிவில் அதைச் சுற்றியிலும் சுழலும் வேகம் மோதுகிறது. இந்த 'வேகம்' உணர்த்துகிறது.இருப்பு  (அறிவு) உணர்கிறது. இந்த உணர்வு விண்ணைச் சுற்றி இருக்கும் அகன்ற நிலையில் ஊடுருவித் தொடர்புகொள்ளும். பரமாணுவின் அசைவை சீராக்கி இயக்க உதவுகின்றது.



திருக்குறள் கூறும் காந்த ஈர்ப்புக் கோட்பாடு - விளக்கம் 


சுத்தவெளி ( சிவம் ), பரமாணு (சக்தி ), காந்தம், காந்தத்தின் தான்மாற்ற நிலைகள் ஆகிய நான்குவகை இயற்கை ஆற்றல்கள் புலன்களால் உணர முடியாதவை என அறியலாம். காந்தத்தின் தன்மாற்ற நிலைகளான  அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை வள்ளுவர் தம் குரலில் மறைபொருளாக குறிப்பிட்டுள்ளார் என்று அறியலாம். இவற்றோடு மனம் என்னும் இயக்க நிலையையும் அறிந்துகொள்ள வேண்டும் என விளக்குகிறார் வேதாத்திரி மகரிஷி.


புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றலை அறியவும் மதிக்கவும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லாரிடமும் எல்லாவற்றிடமும் முறையான தொடர்பு கொண்டு வாழ முடியும். உடலையும் உள்ளத்தையும் மேன்மைப் படுத்திக் கொள்ள முடியும். மனதின் அலைச் சூழலின் வேகத்தை முழுமையாக குறைத்துத் தூய அமைதி நிலையை அடையாளம் என்று திருக்குறள் வழி நின்று மகரிஷி காந்த ஈர்ப்பு கோட்பாட்டை விளக்குகின்றார்.



என்றும் அன்புடன்,


திலக் .ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (YOGA).,


Member, All India Steller Astrologers Association .,


Chennai - India.


Whatsapp : +91 - 8825518634


உத்யோகமா? குடும்பமா? | Job or Family

 உத்யோகமா? குடும்பமா?


நான் உத்தியோகம் பார்ப்பேனா? வெளிநாட்டில் வேலை பெற்று சம்பாதிப்பேனா?

இளம் பெண் ஒருவரின் கேள்வி "நான் வேலைக்கு செல்வேனா? வெளிநாட்டில் வேலை பெற்று சம்பாதிப்பேனா?" என்று கேள்விகளை தொடுத்து ஜாதகத்தை ஆய்வு செய்து பதில் தருமாறு கேட்டு இருந்தார்.

25 வயது மதிக்கத்தக்க இளம் பெண். அவர் Bachelor of Naturopathy & Yogic Sciences (BNYS) 4.5 வருட படிப்பை முடித்து, தற்போது M.Sc - Yoga for Human Excellence (MYH) தொலைதூர கல்வியில் படித்து வருகிறார். திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகின்றன.

கனவரது குடும்பம் சென்னையில் வசித்து வசித்துவருகின்றனர். இவரது பெற்றோர்கள் நல்ல வசதியான பின்புலம். கனவரது குடும்பமும் நல்ல வசதி. கனவருக்கு சொந்த தொழில். இவர் வேலைக்கு சென்றுதான் அந்த வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் இல்லை. 

இவரது கனவருக்கு தன் மனைவி அடுத்தவருக்கு கீழ் வேலை செய்ய விருப்பம் இல்லை. அதற்கு காரணமும் உள்ளது, இவர் வீடு அருகாமையிலே பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை வாடகை விட்டு மாதம் லட்சக்கணக்கில் வாடகை வருமானம். இப்படி பல வழிகளில் இவரது கணவர் குடும்பத்திற்கு வருமானம். வீட்டு வேலைக்கு முழுநேர வேலை ஆட்கள், தோழி அவர்கள் “அடுப்பாங்கரையே கைலாசம், அகமுடையானே வைகுந்தம்” என்று  கணவரின் நலனையும் குடும்பத்தையும் கவனித்தால் போதும். அவ்வளவு சௌகரியம்.

எல்லா வசதிகளும் சௌகரியங்களும் இருந்தாலும் இளம் பெண் அவர்கள் வேலைக்கு செல்வதில் உறுதியாக உள்ளார். மேலும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்ய விருப்பப்படுகின்றார். இது சம்பந்தமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பபடும். கணவரின் எதிர்ப்பு, விருப்பத்திற்கு மாறான வாழ்க்கை, தனது எதிர்கால கனவே சிதைந்து போய்விட்டதே  என்ற விரக்தி, இளம் பெண் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உத்தியோகமா? குடும்பமா? எது முக்கியம் என்று அறியாமல் மனக்குழப்பத்தில் இருந்துள்ளார். இந்த தருணத்தில் எம்மை அணுகி தக்க ஆலோசனை வழங்குமாறு கேட்டு இருந்தார்.


ஒருவரின் சம்பாத்தியம் மற்றும் தொழில் அமைப்பு நல்ல முறையில் அமைய சாதகப்படி எவ்வாறு அமைய வேண்டும்? 


ஒருவரின் சம்பாத்தியம் அவர் செய்யும் தொழிலை பொறுத்து அமையும். பொதுவாக 10ம் பாவம் என்பது ஜோதிடத்தில் தொழிலை பற்றிய விவரங்களை அறியும் பாவம். இதன் திரிகோண பாவங்கள்  2 மற்றும் 6ம் பாவங்கள் ஆகும். 2ம் பாவம் தன நிலையையும், 6ம் பாவம் ஒருவரிடத்தில் பணி புரிதல் மற்றும் உடல் உழைப்பை தெரிவிக்கும். அதனால் நம் முன்னோர்கள்  2, 6, 10ம் ஆகிய பாவங்களை கர்ம ஸ்தானம் என்று அழைத்தார்கள். 

10ம் பாவம் பொதுவாக 2, 6, 10 ஆகிய பொருள் பற்றான லக்கினத்திற்கு தீங்கு விளைவிக்காத இரட்டை படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் சாதகர் தொழில் ரீதியாக சிறந்து விளங்குவார். மேலும் சுய தொழிலோ அல்லது வேறு ஒருவரிடம் பணிபுரிந்தாலோ நல்ல நிலையில் சம்பாதிக்கும் நிலையை பெறுவார். 

மாறாக 10ம் பாவம் 2, 6, 10ம் பாவங்களுக்கு 12ம் பாவங்களான 1, 5, 9ம் ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டாலோ அல்லது நிலையற்ற பலனை அளிக்கக்குடிய சந்திரன் 10ம் பாவத்திற்கு உபாதிபதியாக அமைந்தாலோ, இது பொருளாதாரத்திற்கு எதிரான விளைவை தரும். நிரந்தரமற்ற வேலை, வேலையின்மை, தொழில் நசிவு போன்ற இன்னல்களை தரும். மேலும் பணிபுரியும் இடத்தில் பொறுப்பற்ற தன்மையால் அசிங்க அவமானங்களை சந்திக்க நேரிடும். ஆகவே ஒருவரது கர்மஸ்தானம் 2, 6, 10ம் பாவங்கள்  இரட்டை படை பாவங்களுடன் சுப தொடர்பில் அமைந்தும், சந்திரன் உப நட்சத்திரமாக இந்த பாவங்களுக்கு அமையாமல் இருந்தால் அது தொழில் ரீதியாக ஒரு நல்ல யோகமான சாதகம். 


இளம் பெண் பிறப்பு நேர சாதக விவரங்கள் 

கும்ப லக்னம், கடக ராசி ஜென்ம நட்சத்திரம் பூசம்.தைதுலம் கரணம் சுகர்மம் யோகம். காலபுருஷ தத்துவப்படி லக்னம் ஸ்திர ராசியான கும்ப ராசி. காற்று ராசியை லக்னமாக உடையவர் புத்தி சாதுரிமாகவும் துல்லியமாக விரைந்து சிந்திப்பவராக இருப்பார்கள். ஸ்திர ராசி பாவத்தின் குண இயல்பு ஆரம்பத்திலே முழுமையாக வளர்ந்த பாவமாக செயல்படும். 

இது பாரம்பரிய சோதிட படி பொது பலன் மட்டுமே. இதன் பூர்வ குண இயல்போடு பாவ லாபாதிபதி தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் வாயிலாக பாவத்தின் வலிமையை ஏற்று விதி பலன்களை கிரக காரகங்களுடன் நிகழ்த்துகிறார் என்பதை நன்கு அறிய வேண்டும். 


உத்தியோகம் பார்க்கும் கொடுப்பினை உள்ளதா? 

இளம் பெண் அவர்களின் கேள்வியை பார்க்கும் போது அவர் இரண்டு கேள்விகளை கேட்டுள்ளார். முதல் கேள்வி "நான் உத்தியோகம் பார்ப்பேனா?" இரண்டாவது கேள்வி "வெளிநாட்டில் வேலை பெற்று சம்பாதிப்பேனா?". முதல் கேள்விக்கான விதி கொடுப்பினையை முதலில் ஆய்வு செய்வோம். 

தொழில் ஸ்தானம் 10ம் பாவம் நிலையற்ற பலன்களை அளிக்கக்கூடிய சந்திரன் உபாதிபதியாக அமைந்தது தொழில் ஸ்தானத்தின் கொடுப்பினை நிலையற்றதாகிவிட்டது. மேலும் 10ம் பாவத்திற்கு 8ம் மற்றும் 4ம் பாவங்களான முறையே 5ம் மற்றும் லக்ன பாவத்திற்கு சந்திரனே உபாதிபதியாக அமைந்தது மேலும் 10ம் பாவத்தை வலிமை இழக்க செய்கின்றது. 

பத்தாம் பாவத்திற்கு 1, 5ம் பாவத் தொடர்பு தொழில் காரக ரீதியில் எதிராக வேலைசெய்து பணி புரியும் யோகத்தை விதிப்படி நிலையற்றதாக மாற்றினாலும் தோழி அவர்கள் பெரும் முதலீடுகள் தவிர்த்து, தான் படித்ததற்கு ஏற்ப சுயமாக கலை, ஆன்மீகம், தியானம், யோகா தெரப்பி மற்றும் சேவை சார்ந்த தொழிலில் சிறப்பாக வளர சூட்சகமாக விதி மறுக்கவில்லை என்பதை இங்கு நாம் நிதானித்து அறிய வேண்டும். 

பொருள் பற்றான, அதிக லாப நோக்கோடு முதலீடு செய்து நிறுவனம் சார்ந்த பெரும் தொழிலில் ஈடுபட முடியாதே தவிர தான் சுயமாக சிறிய அளவிலான தனது படிப்புக்கு ஏற்றாற்போல் சொந்தமாக கிளினிக் அமைத்துக்கொண்டு யோகா பயிற்சியாளராக, இயற்கை வைத்தியம் மற்றும் யோகா தெரபிஸ்ட்டாக  குறைந்த  கட்டணத்தில்  மக்களுக்கு சேவையாற்ற தோழி அவர்களின் சாதகம் சாதகமாக இருக்கின்றது. மற்றவருக்கு கீழ் ஊதியம் பெறவேண்டிய அவசியமும் இல்லை. கணவரின் விருப்பத்திற்கு மாறாக நடக்க வேண்டிய அவசியமும் இல்லை. தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வீட்டின் அருகாமையிலேயே இவரது கடைகளில் ஒன்றை சொந்த கிளினிக்க்காக மாற்றிக்கொள்ளலாம்.

 

வெளிநாட்டில் நிலையாக பணிபுரிந்து சம்பாதிப்பாரா? 

வெளிநாட்டுக்கு இன்ப சுற்றுலா மற்றும் குறுகிய நாட்கள் தங்கி செய்யும் தற்காலிக வேலை சம்பந்தமாக செல்லாம். நீண்டநாள் தங்கி வெளிநாட்டில் உத்யோகம் பார்த்து பணம் சம்பாதிக்க முடியுமா என்ற இரண்டாம் கேள்விக்கான பதில் முதல் கேள்விகான விளக்கத்திலே பதில் அமைந்துவிட்டது.



அவரது கணவர் சம்மதிப்பாரா?


இவ்வாறு அவருக்கு ஆலோசனைகளை சாதக ரீதியாக சாதக பாதகங்களை எடுத்துக்கூறி, அவரது விருப்பத்தை தக்க சமயத்தில் கணவருடன் பொறுமையாக ஆலோசித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு சம்மதம் அளிப்பார் என்றேன். 


கொஞ்சநாள் கழித்து, எமது தோழி அலைபேசியில் எம்மை அழைத்திருந்தார், அவரது குரலில் முன்பைவிட நல்ல சந்தோஷமும் , உற்ச்சாகமும் தெரிந்தது.


நண்பரே! தாங்கள் கூறியவாறு எமது கணவரிடம் பேசினேன். எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் சம்மதித்துவிட்டார். கிளினிக் ஆரம்பிப்பதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளை செய்துவிடுகின்றேன் என்று கூறினார். மேலும் தனது மனக்குழப்பதினால் தவறான முடிவெடுக்க இருந்த என்னை, தங்களது சோதிட ஆய்வு மூலம் தக்க ஆலோசனை வழங்கி  எம்மை நேர்மறையாக சிந்திக்க வைத்துள்ளீர்கள்". குடும்ப வாழ்க்கை மீது புது நம்பிக்கை பிறந்துள்ளது என்று  இவ்வாறு தோழி அவர்கள் கூறி, தனது நன்றியை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


எமது ஆசான் ஜோதிட நல்லாசிரியர், A. தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன்,


என்றும் அன்புடன்,


திலக் .ஜெ. பாலமுருகன் MCA., M.Sc (YOGA).,

Member, All India Steller Astrologers Association .,

Chennai - India.

Whatsapp : +91 - 8825518634


Friday, April 1, 2022

மனைவியால் தனயோகம் யாருக்கு

 மனைவியால் தனயோகம் யாருக்கு 


அன்புடையீர் வணக்கம்,

காட்டில் திரியும் கற்கால வாழ்க்கையிலிருந்து கணினி யுகத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த பரிணாம வளர்ச்சியில், கூட்டம் கூட்டமாக திரிந்துவிடாமலும், ஆண் பெண் தனித்து பிரிந்துவிடாமலும், அவன் கண்ட உன்னதம், “குடும்ப அமைப்பு”.  

"மகராஜன் உலகை ஆளுவான்.. மகாராணி அவன் மனதை ஆளுவாள்.." என்ற உன்னத வரிகளுக்கு ஏற்ப கணவனை முன்னிறுத்தி மனைவியானவள் விட்டுக்கொடுத்து பக்குவமாக குடுமபத்தை நடத்தினார்கள். பெண்களால் குடும்பம் கட்டுக்குலையாமல் காக்கப்பட்டது. 

காலம் மாறியது போல் மனிதனும் மாறிவிட்டான். தற்காலத்தில் குடும்ப வாழ்க்கையும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. அன்பு, பாசம், நேசம், பரிவு, ஊடல், கூடல், அரவணைப்பு, சகிப்புத்தண்மை போன்ற அக  காரகங்களை புறம் தள்ளி , பொருள் சார்ந்த ஏற்றமே குடும்ப வாழ்க்கையின் முன்னேற்றமாக பரவலாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. 

"காசில்லாதவனை வேசியும் விரும்பாள்" கிராமத்து பழமொழி போல் யதார்த்த வாழ்வில் வெறும் அன்பு, கருணை, பாசத்தை மட்டும் வைத்து குடும்பத்தை சந்தோஷமாக நடத்திவிட முடியாது. 

நவநாகரீக உலகத்தில் அவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் தேவைகள் பெருகிவிட்டன.  தேவைகள் அதிகம் உள்ள குடும்பத்தில் ஒருவர் சம்பாத்தியம் மட்டும் போதாது; "அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்ததுது குடுமி" என்பது போல் பற்றாகுறையே குடும்பத்தில் சதா ஓங்கியிருக்கும். இது போன்ற சூழலில் கனவன்-மனைவி இருவரின் சம்பாத்தியம் பொருளாதார தேவைகளை சிரமமின்றி சமாளிக்க உதவும். 

சொல்வேந்தர் சுகி. சிவம் அவர்கள் மிக அருமையாக சொல்லுவார் "ஆணுக்கு திருமணத்திற்கு முந்தைய எதிர்பார்ப்பு பொருள் சார்ந்தது, திருமணத்திற்கு பிந்தையதையது மனைவியின் விசுவாசத்தை சார்ந்தது" என்பார்.  

சும்மாவா சொன்னார்கள் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை" என்பது போல் சந்தோஷமான குடும்ப வாழ்விற்கு பொருள் மிக அவசியம். 

பொருள் சார்ந்த எதிர்பார்ப்பு ஆண்களிடம் தற்காலத்தில் மிகுந்து காணபடுகின்றது. சமீபத்தில் மணமகள் தேவை விளம்பரம் ஒன்றை பார்க்க நேர்ந்தது, அதில் எதிர்பார்ப்பு என்ற காலத்தை படித்து அதிர்ந்தே போனேன்... அவ்ளோ பெரிய லிஸ்டு..!  

35 வயது ஆண், முதுகலை பட்டம் முடித்தவர். அரசுப்பணியில் உள்ளார். 

திருவாளரும், திருவாளர் குடும்பத்தாரும் என்ன எதிர்பாக்குறாங்கன்னா..? 

"உயர் படிப்பு (அ) சமமான படிப்பு, நிரந்தர அரசுப்பணி (அ) நிலையான தனியார் வேலை, சுயதொழிலாகவும் இருக்கலாம் (போனா போட்டும்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்களாம்). 

மாநிறம் (அ) சிவப்புநிறம், சுத்த ஜாதகம், பிறப்பு வரிசையில் முதலாவது பெண் தவிர்க்கவும்.  

லிஸ்ட்டு இதோட முடில..! 

நல்ல குடும்ப பின்னணியுடன், நல்ல குணமுள்ள,  குடும்பத்தை சிறப்புடன் நிர்வாகிக்கக்கூடிய, நல்ல  பண்புள்ள அழகான பெண் தேவை. 

மற்ற விவரங்கள் நேரில்.”  

அப்பா.. இதோட முடிச்சுட்டாங்களேன்னு பெரு மூச்சுவிட்டேன். 

ஒரு வேலை, விளம்பரத்துல இடம் பத்தாம போயிருக்குமோனு நினைக்குறேன். 

இவ்வளவு எதிர் பார்ப்போட 35 வயது ஆணுக்கு, இன்னும் பெண் தேடிகிட்டு இருந்தா..! அவர் கல்யாணம்பண்ணி  வாழ்க்கைல என்னத்த சாதிக்க போறார்னு தெரியல. 

இவர் மட்டுமல்ல, பெரும்பாலானோர், வீட்டுக்கு மருமகளா வரக்கூடிய பெண்ணிடம், குடும்ப வாழ்க்கைக்கு எதிர்பார்க்கும் தகுதி, அம்சம், அவசியமானைவை எது என்கின்ற அடிப்படை புரிதல் இல்லாமல் தெளிவற்ற நிலையிலே, பொருளாதாரம் சார்ந்த  அதிக எதிர்பார்ப்போடு  திருமணத்திற்கு பெண் தேடுகிறார்கள். இது போன்ற ஆட்களுக்கு, எதிர் பார்த்தது போல் எல்லாம் நடப்பதும் இல்லை, கிடைப்பதும் இல்லை. கடைசியில் இவர்கள் சிக்கும் இடமே வேறு. 

இந்த அன்பரின் எதிர்பார்ப்பை தவறு என்று  கருத வேண்டாம். "ஆசை பெருக அலைச்சலும் பெருகும்" என்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிர்பார்ப்பில் சற்று இறங்கி வரலாம். திருமணம் விரைவில் கூடி வரும். 

எல்லாம் அவரவர் விதிப்படியே, சுக துக்கங்கள் நிகழும் என்ற உண்மையை உணர வேண்டும். 

சரி. அனைவருக்கும் அதிக சீர் தந்து வேலைக்கு செல்லும் மனைவி அமைவார்களா? எல்லோராலும் மனைவியால் தனயோகம் அடைந்துவிட முடியுமா? மனைவி வேலைக்கு போனாலும் முழு சம்பாத்தியத்தையும் கனவனால் அனுபவிக்க முடியுமா? இதற்கெல்லாம் ஒரு யோகம் வேண்டாமா? எப்படி அறிவது. 

இது போன்ற கேள்விகளுக்கு ஜோதிடத்தில் பதில் உண்டு. சரியான பிறப்பு நேரத்தை கொண்டு உயர் கணித சார ஜோதிடம் மூலம் துல்லியமாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். 

ஏழாம் பாவம் ஜாதகருக்கு அமைய போகும் மனைவியை பற்றி குறிக்கும். அன்பானவரா, அமைதியானவரா,  குணமானவரா, கொடூரமானவரா, குலம் காக்கும் குத்துவிளக்கா, எடுப்பார் கைப்பிள்ளையா, கனவன் சொல்லுக்கு கட்டுபட்டவரா? சொல்மீறிச் செயல்படுபவரா? சிக்கனமானவரா? செலவாளியா? வேலைக்கு செல்பவரா? இல்லத்தரசியா? அதிக சீர் கொண்டுவருபவரா? ஆடம்பர விரும்பியா? மனைவியால் பணக்கார வாழ்க்கையா? நடுத்தர குடும்பமா? ஏழ்மையா? என மனைவியால் அடைய போகும் யோகத்தை இந்த பாவத்தை கொண்டு துல்லியமாக அறிந்துவிடலாம். 

மனைவி மூலம் தனயோகம் யாருக்கெல்லாம் அமையும்? "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், கனவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம், என்று பெரியோர் கூறுவதை கேட்டிருப்போம். வேலைக்கு செல்லும் மனைவி அமைவதெல்லாம் அவரவர்க்கு ஏழாம் பாவம் புத்திநாதன் கொடுக்கும் வரம்."  

  

வேலைக்கு செல்லும் மனைவி யாருக்கெல்லாம் அமையும்? 

ஆணின் ஐனன ஜாதகத்தில் களஸ்த்திர ஸ்தானம் என்னும் 7ம் பாவமும், சுபிட்சகாரகன் சுக்கிரனும், பொருள் பற்றுக்கு உகந்த, கர்ம ஸ்தானமான 2, 4, 6, 10ம் ஆகிய பாவங்களுடன் தொடர்பு பெற்றிருந்தால், ஜாதகருக்கு வேலைக்கு செல்லும் மனைவி அமைவார்.  

மேற்கண்ட பாவமும், கிரகமும் 5,9 மற்றும் 8,12ம் ஆகிய பாவங்களின் தொடர்பை பெறாமல் இருக்க வேண்டும். 

 

வேலைக்கு செல்லும் மனைவி யாருக்கு உத்தமம்? 

7ம் பாவம் 2,4,6,10ம் ஆகிய பொருள் சார்ந்த பாவங்களுடன் தொடர்புடைய ஜாதகர் வேலைக்கு செல்லும் மணைவியை திருமணம் புரிவது உத்தம். ஜாதகரின் மனைவியின் ஜாதகத்தில் 6ம் பாவம் இதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டியது அவசியம்.

  

மனைவி மூலம் அதிக வரதச்சனை கிடைக்கும் யோகம் யாருக்கு...? 

ஜனன ஜாதகத்தில் 7ம் பாவம் மற்றும் சுக்கிரன் அகபற்றின் ஜாம்பவான் என்று கூறக்கூடிய 5,9 பாவங்களை தொடர்புகொள்ளாமலும், திருமணம் நடைபெறும் காலத்தில் 2,4,10ம் பாவங்களின் தசா புக்திகள் நடைபெற்றால் மனைவியின் மூலம் அதிக சீர் பெறலாம். அதற்கான யோகம் இயற்கையிலே அமைந்துவிடும்.

  

அதிக வரதட்சணை தரும் பெண்ணின் ஜாதக அமைப்பு 

பெண்ணின் ஜனன ஜாதகத்தில், 7ம் பாவம் மற்றும் செவ்வாய் 5,9 & 8,12 ஆகிய பாவங்களுடன் தொடர்பு பெற்று, திருமணம் நடைபெறும் காலத்தில் 5,9 & 8,12 ஆகிய தசா புக்திகள் நடைபெற்றால் அதிக சீர் கொண்டு வருவார். 

5,9 - மட்டும் நடைபெற்றால் தானாக மனமுவந்து தாராலமாக சீர் கொண்டுவருவார். 

8,12 - மட்டும் என்றால் "ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்பதா" என்பது போல் கட்டாயத்தின் பேரிலும், பெருமையை நாட்டுவதற்கும், பணக்கார ஆளுமையை நிறுபிப்பதற்கும் அதிக சீர் செய்ய வற்புறுத்துவார்கள். 

நவீனயுக அரைவேக்காட்டு தத்துவ(தர்க்க) வாதிகள் எக்காரணம்கொண்டும் மனைவி கணவனை சார்ந்து இருக்கக்கூடாது என்று பிரசங்கம் செய்கின்றார்கள். இது முற்றிலும் தவறு. மனைவி கணவனை சார்ந்தும், கணவன் மனைவியை சார்ந்தும் வாழ்வதே குடுமபத்திற்கு  நன்று. 

“பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே..!”  என்ற தேவார பாடல் போல் மனைவி என்பவள் கணவனின் சரிபாதி என்பதை உணரவேண்டும். உலகில் நாம் நிறைவாக வாழ வேண்டுமெனில் ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் இணைந்தே வாழ வேண்டும். சக்தி இல்லையேல் சிவன் இல்லை  சிவன் இல்லையேல் சக்தி இல்லை.  

உண்மையான நல்ல குடும்பத்தின் அடையாளம் என்னவென்றால்? பொருளோடு அருளையும் சேர்க்க வேண்டும் என்பார்கள். மனைவிக்காக எந்த துன்பத்தையும் ஏற்கும் கணவனும், கணவனுக்காக எந்த துயரத்தையும் அனுபவிக்க முயலும் மனைவியும் இணைந்த மண  வாழ்க்கையே நல்ல குடும்பத்தின் அடையாளம். இவர்களின் குடுமப வாழ்க்கை சிறக்கும், செழிக்கும். 

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன். 

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்வழிகாட்டுதலுடன்,

 

என்றும் அன்புடன், 

திலக். ஜெ.பாலமுருகன் MCA., M.Sc (Yoga).,

Member, All India Stellar Astrologer Association,

CHENNAI | TAMILNADU | INDIA

Whatsapp : +91 - 8 8 2 5 5 1 8 6 3 4.